Tuesday, 23 June 2020

அமெரிக்க, ஐரோப்பிய ஆயர்கள் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கு

ஹிரோஷிமா நினைவிடததில் திருத்தந்தை பிரான்சிஸ்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் David J. Malloy அவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவையின், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு பணிக்குழுவின் தலைவர் ஆயர் Rimantas Norvila அவர்களும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
ஜூன் 22, வருகிற திங்களன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நடைபெறவுள்ள கூட்டம், அமைதியான முறையில்   இடம்பெற்று, நல்ல பலன்களைக் கொணருமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும் (USCCB), ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவையும் (COMECE) இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம், பலனுள்ள கலந்துரையாடல்களாக அமைவதற்கு விசுவாசிகள் அனைவரும் உருக்கமுடன் செபிக்குமாறு, அமெரிக்க மற்றும், ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து, ஜூன் 19, இவ்வெள்ளி மாலையில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், அவைகள் களையப்படவும், அது குறித்த புதிய துவக்கம் என்ற ஒப்பந்தம் (New START) புதுப்பிக்கப்படவும், அதன் வழியாக, அமைதியும் நீதியும் நிறைந்த சிறந்த உலகை அமைக்கவும் இந்த கூட்டம் உதவுமாறு கடவுளை மன்றாடுவோம் என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
ஆயர்களின் விண்ணப்பம்
இந்த புதிய ஒப்பந்தம், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காலாவதியாக அனுமதிக்கப்பட்டால், 1972ம் ஆண்டுக்குப்பின், முதல்முறையாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இரஷ்யாவிலும் இருக்கின்ற அணு ஆயுத யுக்திகளை ஆய்வுசெய்ய, சட்டப்படி எந்த கட்டுப்பாட்டையும், அந்நாடுகள் கொண்டிருக்காது, இது, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும், உலகளாவிய அமைதிக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை உருவாக்கும் என்று, ஆயர்களின் அறிக்கை எச்சரித்துள்ளது.
பனிப்போர் முடிவுற்றபின், அணு ஆயுதப் போரின் கொடூரம் பலரால் மறக்கப்பட்டு வருகிறது என்றும், அண்மைக் காலங்களில் உலக அரசியலில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள், நமது உலகம் மாபெரும் ஆபத்தில் உள்ளது என்பதையே நினைவுபடுத்துகின்றன என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.
New START ஒப்பந்தம்
New START ஒப்பந்தம் என்பது, பெரும் அழிவுகளைக் கொணரும் ஆயுதக் குறைப்பு மற்றும், அவற்றை வரையறுத்தல் குறித்து, நடவடிக்கைகள் எடுப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவிற்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தம் ஆகும்.  
இந்த ஒப்பந்தம், 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...