Tuesday 23 June 2020

இயேசு, புலம்பெயர்ந்தோரில் பிரசன்னமாய் இருக்கிறார்

வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் புலம்பெயர்ந்தோர் நிலையைச் சித்தரிக்கும் சிலைகள்

ஏரோதின் காலத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பித்துச்செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட இயேசு, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரில் பிரசன்னமாய் இருக்கிறார்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் முகங்களில் இயேசுவைக் கண்டு அவர்களை அன்புகூரவும், அவர்களுக்குப் பணியாற்றவும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, புலம்பெயர்ந்தோர் உலக நாள் என்ற ஹாஷ்டாக்குடன் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏரோதின் காலத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பித்துச்செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட இயேசு, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரில் பிரசன்னமாய் இருக்கிறார், அவர்களின் முகங்களில் தம்மைக் காண கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், ஜூன் 20, இச்சனிக்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களையும், பணிமாற்றம் பெற்றுச்செல்லும், திருப்பீடத்தின் இந்தியத் தூதர் ஜார்ஜ் சிபி (George Sibi) அவர்களையும், நைஜீரியத் தூதர் George Umo Godwin  அவர்களையும், தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தைக்காக செபம்
மேலும், ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் திருஇதய விழாவன்று, அருள்பணியாளர்களின் புனித வாழ்வுக்காகச் செபிக்கும் செபமாலை பக்திமுயற்சி, இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஜூன் 19, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஇதய விழாவன்று, உலகின் பல பகுதிகளின் விசுவாசிகள், திருத்தந்தைக்காகச் செபமாலை செபித்தனர்.
இவ்வெள்ளியன்று 11வது ஆண்டாக, இந்த பக்தி முயற்சி இடம்பெற்றது. இதில் பங்குகொள்வோரின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது என்றும், 2019ம் ஆண்டில், 285க்கும் அதிகமான இடங்களில் விசுவாசிகள் கூடி செபமாலை செபித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பக்தி முயற்சியில், ஒவ்வோர் ஆண்டும் இயேசுவின் திருஇதய விழாவன்று, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விசுவாசிகள் பங்குகொள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும், அந்த விழா நாளில் ஓர் அரை மணி நேரம் செபமாலையின் ஒரு பத்து மணிகளைச் சொல்லி, அருள்பணியாளர்களின் புனித வாழ்வுக்காக அர்ப்பணிக்கின்றனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...