Thursday 25 June 2020

கிறிஸ்தவ மறைக்கு எதிராக நிகழும் வன்முறைகள் நீங்க...

எத்தியோப்பியாவின் கிறிஸ்தவ கோவிலில்

ஜூன் 22, ஜான் பிஷர் மற்றும் தாமஸ் மூர் ஆகிய புனிதர்களின் திருநாள் துவங்கி, ஜூன் 29, புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாள் முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் மதச் சுதந்திர வாரம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
மதங்களின் அடிப்படையில் உலகெங்கும் நிலவும் பாகுபாடுகள் களையப்படவும், குறிப்பாக, கிறிஸ்தவ மறைக்கு எதிராக நிகழும் வன்முறைகள் நீங்கவும், நடைபெறும் இவ்வாரம் முழுவதும் செபிக்குமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 22, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட ஜான் பிஷர் மற்றும் தாமஸ் மூர் ஆகிய புனிதர்களின் திருநாள் துவங்கி, ஜூன் 29, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படவிருக்கும் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாள் முடிய, மதச் சுதந்திர வாரம், அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையால் சிறப்பிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு வாரத்தையொட்டி, "அனைவரின் நன்மைக்கென" என்ற தலைப்பில், இறைவேண்டல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் மதச் சுதந்திர பணிக்குழுவின் தலைவர், பேராயர் Thomas Wenski அவர்கள், ஆயர்கள் சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.
மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக உலகெங்கும் வன்முறைகள் நிகழ்கின்றன என்றும், கலாச்சாரத்தில் வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் சமுதாயங்களிலும், மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக, உடலளவு வன்முறைகள் இன்றி, உள்ளத்தளவு வன்முறைகள், மறைமுகமாக நடைபெறுகின்றன என்று, பேராயர் Wenski அவர்கள் கூறியுள்ளார்.
சமயச் சுதந்திரத்திற்காக இறைவேண்டல் எழுப்பும் வாரத்தை, அமெரிக்க ஆயர் பேரவை 2012ம் ஆண்டிலிருந்து சிறப்பித்து வருகிறது என்பதும், இவ்வாரத்தின் ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன. இவ்வாண்டு, கத்தோலிக்க நலவாழ்வு மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோருக்காக சிறப்பான இறைவேண்டல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...