Tuesday 23 June 2020

புலம்பெயர்ந்தோர், அநீதியான அமைப்புமுறையின் பலிகடாக்கள்

1592604980894.jpg

மனிதசமுதாயத்தை எது பாதித்தாலும் அதற்கெதிராய்ப் போராடுவதற்கு உலகளாவிய ஒருமைப்பாடு அவசியம் என்பதை கோவிட்-19 நெருக்கடிநிலை உணர்த்தியுள்ளது - உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் ஜான்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
புலம்பெயர்ந்தோரை மாண்பும், பாதுகாப்பும் நிறைந்த முறையில் ஏற்று, அவர்கள் பாதுகாப்புடன், குறிப்பாக, இந்த கொள்ளைநோய் காலத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்படுமாறு, உலக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு.
ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், புலம்பெயர்ந்தோர், அநீதியான அமைப்புமுறையின் பலிகடாக்கள் என்று கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களின் பொறுப்புணர்வு
புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, குறிப்பாக, பல்வேறு உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் இடங்களில் அம்மக்களைப் பாதுகாப்பதற்கு, அரசியல் தலைவர்கள், துணிவுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஜான் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர், மாண்புடனும், நன்னெறி விழுமியங்களுடனும், உரிமைகளுடனும் வாழவேண்டிய மனிதர்கள் என்றும், அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கவேண்டியதும், அவர்கள் மாண்புடன் வாழ்வதை உறுதிசெய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், ஜான் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தில் மிகவும் வலுவிழந்த மக்கள் மீது அன்புசெலுத்தி, மனித உடன்பிறந்தநிலையை ஊக்குவிப்பதே காரித்தாசின் முக்கிய நோக்கம் என்றும், கடந்த ஆண்டில் 3 கோடியே 34 இலட்சம் மக்கள், கடினமான பாதைகள் வழியே 145 நாடுகளைக் கடந்துசென்றனர் என்றும் கூறியுள்ள ஜான் அவர்கள், புலம்பெயர்ந்தோர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் மற்றும், கதை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதசமுதாயத்தை எது பாதித்தாலும் அதற்கெதிராய்ப் போராடுவதற்கு உலகளாவிய ஒருமைப்பாடு அவசியம் என்பதை கோவிட்-19 நெருக்கடிநிலை உணர்த்தியுள்ளது என்றும், புலம்பெயர்ந்தோரின் துன்பங்களை, புதிய வழிகளில் களைவதற்கு, 2020ம் ஆண்டு, நம்மை இட்டுச்செல்ல வேண்டும் என்றும், உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் ஜான் அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...