Tuesday, 23 June 2020

மனிதநேயப் புயல்கள்

மேலமாத்தூர் மணிகண்டன் இலவசமாக கற்றாழை சாறு

இந்த உலகில் கைம்மாறு கருதாமல் நாம் செய்யும் நன்மைகள், ஏதாவது ஒருவழியில் எப்போதும் நமக்குத் திரும்ப கிடைக்கும் என்பது, பலரது வாழ்வு சொல்லித்தரும் பாடம்
மேரி தெரேசா: வத்திக்கான்
கபீல் கான் (Kafeel Khan) அவர்கள், இந்தியாவின் தலைசிறந்த குழந்தைநல மருத்துவர்களில் ஒருவர். இன்று பீகார் மாநிலத்தில் இவரது பெயரை தெரியாதவர்களே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆயினும் இவர், உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரில் பாபா ராகவ் தாஸ் (Baba Raghav Das, Gorakhpur) அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். 2017ம் ஆண்டில் அந்த மருத்துவமனையில், ஆக்ஜிசன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, ஏறத்தாழ எழுபது பச்சிளம் குழந்தைகள் இறந்தன. மாநில அரசின் கையாலாகாத தன்மையால் மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அவ்வேளையில் கபீல் கான் அவர்கள், தனது சொந்த செலவில், தான் நடத்தும் தனியார் மருத்துவமனையிலிருந்து ஆக்ஜிசன் சிலிண்டர்களை வரவழைத்து, நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். உத்தர பிரதேச மாநில அரசு, அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக பணம் கொடுக்காததால் திடீரென்று விநியோகத்தை நிறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அம்மாநில அரசு, மருத்துவர் கபீல் கான் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, பிரச்சனையை திசை திருப்பியது. அதனால் அவர் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். பல போராட்டங்களுக்குப்பின் அவர் பிணையலில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தனது மருத்துவக்குழுவுடன் பீகார் சென்று, இலவச முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். இந்த உத்தர பிரதேச மனிதநேயப் புயல், தற்போது பீகாரில் மையம் கொண்டுள்ளது. இஸ்லாமியரான மருத்துவர் கபீல் கான் அவர்கள், மனிதநேயச் செயல்களுக்கு மதம் முக்கியமல்ல என்பதை தன் செயலால் நிரூபித்துக் காட்டிவருகிறார் என்று, பல்வேறு ஊடகங்கள் பாராட்டுச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேரி ஜான்சன்
அமெரிக்க ஐக்கிய நாட்டில், மேரி ஜான்சன் என்ற வெள்ளையின பெண்மணிக்கு ஒரு நாள் நீதிமன்றத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வந்தது. அன்று அவர் அதை வாசித்துக்கொண்டிருக்கையில், ஓர் அதிகாரி அவர் வீட்டிற்கு வந்து, மேடம், நீங்கதானே மேரி ஜான்சன், நீங்கள் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும், இது அரசின் உத்தரவு என்று சொல்லி, தான் கொண்டுவந்திருந்த ஆணையைக் காட்டினார். அப்போது மேரி ஜான்சன் அவர்கள், சார், நான் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற முடியாது, மாலை 5 மணிவரை அவகாசம் இருக்கிறது, இங்கு எல்லாவற்றையும் நான் தனியாளாகச் செய்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அப்போது அந்த அதிகாரி, நேரமாகிறது, உங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள், இந்த வீடு ஏலத்திற்கு விடப்பட்டுவிட்டது, நீங்களாக வெளியேறவேண்டும், இல்லாவிடில் கைதுசெய்யப்படவேண்டியிருக்கும், எதைத் தேர்ந்துகொள்கிறீர்கள் என்று அதட்டிக் கேட்டார். அப்போது அந்தப் பெண்மணி, சார், எனது கணவர் எனக்கென எதையும் விட்டுச்செல்லவில்லை. எனக்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை, இன்னும் சிறிதுநேரம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சினார். அதற்கு அந்த அதிகாரி, மேடம், அது உங்கள் பிரச்சனை, எனது பிரச்சனை அல்ல, இந்த தீர்மானத்தை மாற்றக்கூடிய ஒரே ஆள், இந்த வீட்டு உரிமையாளர் மட்டுமே, உங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்யுங்கள் என்று அதட்டிக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில், 36 வயது மதிக்கத்தக்க கறுப்பின மனிதர் ஒருவர் அங்கு வந்தார். மாம், எல்லாம் சரியாகிவிடும், அமைதியாக இருங்கள் என்று சொன்னார். அதற்கு அந்த அதிகாரி, நீ யார் இதில் தலையிட, நீ இந்த வீட்டின் உரிமையாளரிடம்தான் பேசவேண்டும் என்று கோபமாகச் சொன்னார். ஆமாம். இந்தப் பெண்மணிதான் இந்த வீட்டின் உரிமையாளர். இதோ அதற்குச் சான்றிதழ். இதில் யாருடைய பெயர் உள்ளது என்பதை நீங்களே வாசியுங்கள் என்றார், அந்த மனிதர். மேரி ஜான்சன் என்று அதிகாரி வாசித்துவிட்டு திகைத்து நின்றார். அதற்கு அந்த மனிதர், இந்த வீடு மூடப்படும் அறிக்கையை வாசித்தேன், எனவே அந்த வீட்டை நான்தான் மேரி ஜான்சன் அவர்கள் பெயரில் வாங்கினேன் என்றார். அப்போது அந்த அதிகாரி, எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று, திகைப்புடன் அவ்வீட்டை விட்டுச் சென்றார். அப்போது மேரி ஜான்சன், அந்த மனிதரிடம், உங்களுக்கு என்னை யார் என்றே தெரியாது, அப்படியிருக்க எப்படி இது..? என்று கண்ணீர்மல்க கேட்டார். அப்போது அந்த கறுப்பின மனிதர், நான் சிறுவனாக இருந்தபோது, நான் அறியாத ஒருவர் எனது வாழ்வை மாற்றினார் என்று சொல்லி, தனது சிறுவயதில் நடந்த அந்த நிகழ்வை விளக்கினார்.
மாம்.., ஒருநாள் நீங்களும், உங்கள் கணவரும் சாலையில் சென்றுகொண்டிருந்தீர்கள். நான் உங்களை அணுகி, என்னிடம் பணம் இல்லை, எங்குச் செல்வதென்றும் தெரியவில்லை, உணவு வாங்க காசு இல்லை, தயவுசெய்து உதவுங்கள் என்றேன். அப்போது நீங்கள், உனது பெற்றோர் எங்கே? என்று கேட்டீர்கள். அதற்கு நான் எனது பெற்றோர் இறந்துவிட்டனர், நான் தனிமரமாக நிற்கிறேன், எனக்கு யாரும் கிடையாது என்றேன். அப்போது நீங்கள், எனக்காக வருந்தி, உங்களது பணப்பையைத் திறக்கப்போனீர்கள். அதைக் கண்ட உங்கள் கணவர் கோபமாக, இங்கே பார், நமக்கே பல பிரச்சனைகள் உள்ளன, இந்த மாதம் வாடகைப் பணத்தைக் கட்டுவதற்கே பணப்பற்றாக்குறை உள்ளது, மேலும் இந்த சிறுவனை நமக்கு யார் என்றே தெரியாது, ஒருவேளை போதைப்பொருள் வாங்குவதற்காக இவன் பணம் கேட்கலாம் என்றார். அப்போது நீங்கள், இவன் உண்மையைப் பேசுவதுபோல் தெரிகின்றது, நான் அவனுக்கு உதவவேண்டும் என்று சொன்னீர்கள். அதற்கு உங்கள் கணவர் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை,  நீ அவனுக்குப் பணம் கொடுப்பதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க இயலாது என்று சொல்லிவிட்டு, அவர் கோபமாகச் சென்றுவிட்டார். ஆனால் நீங்கள் ஒரு கவரை என்னிடம் கொடுத்து, இது உனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என்று சொன்னீர்கள். அப்போது நான், மாம் உங்களுக்கு என்னைத் தெரியாது, இருந்தபோதிலும் எப்படி? என்று குழம்பியபடி கேட்டேன். அதற்கு நீங்கள், ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும்போது, அவர் பதிலுக்குப் பன்மடங்காக எப்போதும் திரும்பப்பெறுவார் என்று சொன்னீர்கள். சரி மாம், நான் எப்போது உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கமுடியும் என்று திரும்பவும்  கேட்டேன்.  அதற்கு நீங்கள், நீ எனக்கு உதவ வேண்டியதில்லை, உன்னிடம் பணம் இருக்கையில் யாருக்காவது உதவி தேவைப்படும், அவருக்குச் செய் என்றீர்கள். அதற்கு நான், நிச்சயம் செய்வேன் என்று சொன்னேன். பின்னர் உங்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைக் கழற்றி என்னிடம் கொடுத்து, எனது அன்னை இதை என்னிடம் கொடுத்தபோது, மேரி ஜான்சன், இந்த சங்கிலியை நீ வைத்திருக்கையில் உனக்கு எப்போதும் நன்மை உண்டாகும் என்று சொன்னார்கள், இப்போது அதை உனக்குத் தருகிறேன், நன்றாய் இரு என, என்னை வாழ்த்திச் சென்றீர்கள். நான் இப்போது வளர்ந்து பெரியவனாகி, நகரில் வீட்டுமனை விற்பனைசெய்பவரில் புகழ்பெற்ற ஒருவராக உயர்ந்துள்ளேன். அண்மையில் வீடுகள் மூடப்படும் பட்டியலைப் பார்க்கையில், நான் ஒருபோதுமே மறந்திராத பெயரைப் பார்த்தேன். அந்தப் பெயர்தான் மேரி ஜான்சன். அந்தப் பெயரே என் வாழ்வை மாற்றியது. இவ்வாறு சொல்லி தான் கழுத்தில் அணிந்திருந்த அதே சங்கிலியைக் கழற்றி அவரிடம் கொடுத்து, உதவி தேவைப்படுபவர்க்கு உதவு, நீ கொடுக்கையில் திரும்ப பன்மடங்கு பெறுவாய் என்று சொல்லிக்கொடுத்தீர்கள். இப்போது அதையே நானும் சொல்கிறேன். இவ்வாறு அந்த மனிதர் சொன்னவுடன், மேரி ஜான்சன் அவர்கள், அவரை அரவணைத்துக்கொண்டார்.
கோவிட்-19 சமுதாய ஊரடங்கு காலத்தில், இவரைப் போன்ற சில மனிதநேயப் புயல்கள் பற்றிய தகவல்கள், வாட்சப் மற்றம், யூடியூப் ஊடகமாக, தொடர்ந்து பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றன.
மேலமாத்தூர் மணிகண்டன்
பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், காடுகளில் இயற்கையான முறையில் விளையும் கற்றாழைகளைக் கொண்டுவந்து, வாடிக்கையாளர்களின் கண்ணெதிரே தோல் நீக்கி கற்றாழைச் சாறு, மற்றும், கை குத்தல் முறையில் தயாரிக்கப்பட்ட கம்மங்கூழை பசுந்தயிரில் கரைத்து, விற்பனை செய்து வருகிறார். குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பிற்குமேல் படிக்காத இவர், சுய தொழில் தொடங்க முடிவெடுத்து இந்த தொழிலைச் செய்து வருகிறார். தள்ளுவண்டி கடை நடத்திவரும் இவர், தனது கடைக்குமுன், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பணமில்லாமல் பசிக்கிறது எனச் சொல்பவர் போன்றோருக்கு, தான் விற்கும் கற்றாழை சாறு, மற்றும் கம்மங் கூழ் இலவசம் என்ற பலகையை மாட்டியுள்ளார். அதோடு அவற்றை அவர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார். இவர் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 50 பேரின் பசியை நீக்கி வருகிறார் என்று விகடன் இதழ் கூறியுள்ளது.
தள்ளுவண்டிக் கடைக்காரரான மணிகண்டன் அவர்கள், இவ்வளவு பெரிய கொள்ளைநோய் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிவரும் இந்தப்  பணியாளர்கள் மற்றும், உணவுக்கு வழியில்லாத ஏழைகளுக்கு, என்னால் ஆன உதவி செய்வது என் கடமை என்று சொல்லியுள்ளார். இந்தப் பணிக்கு இவரது மனைவி மற்றும் மகன்கள் மகிழ்வோடு முழு சம்மதம் தெரிவித்தனர் என்றும், மணிகண்டன் அவர்கள் கூறியுள்ளார்.
மனித சமுதாயம், எதிர்பாராதவேளையில், பல்வேறு பேரிடர்களையும், துன்பங்களையும் எதிர்கொள்ளும் சமயங்களில், இத்தகைய பல மனிதநேயப் புயல்கள், தங்கள் உதவிக்கரங்களை நீட்டி துயர்துடைத்து வருகின்றன. மனிதத்தின் மேன்மை மனிதநேயம். உயிர்களை ஆபத்திலிருந்து காப்பது மனிதநேயம். எனவே மனிதரை, மனிதராக மனதால் பார்த்து, இந்த மண்ணில் மனிதநேயம் மழையாய்ப் பொழிந்திட வாழ்வோம். இந்த உலகில் கைம்மாறு கருதாமல் நாம் செய்யும் நன்மைகள், ஏதாவது ஒருவழியில் எப்போதும் நமக்குத் திரும்ப கிடைக்கும் என்பது, பலரது வாழ்வு சொல்லித்தரும் பாடம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...