Thursday, 18 June 2020

துறவி கையில் எடுத்த ஆயுதம்

ஜென் ஆசிரியர்

கருணை... இதைப்போல மனிதர்களைக் கலங்கடிக்கச் செய்யும் சிறந்த ஆயுதம் வேறு இருக்க முடியாது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஜப்பானில் வாழ்ந்த ஜென் துறவி ஷிசிரி கோஜுன் (Shichiri Kojun) அவர்கள்,  தன் ஆசிரமத்தின் தாழ்வாரத்தில் அமர்ந்து புத்த ஜாதகக் கதைகள் படித்து அதில் அப்படியே ஆழ்ந்து போயிருந்தார். திடீரென்று ஒரு சத்தம். ஷிசிரி அவர்கள் நிமிர்ந்து பார்த்தார். ஒருவன் கையில் மின்னும் கத்தியுடன் அவரை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீ யாரப்பா... உனக்கு என்ன வேண்டும்?’’
``நானா... இன்னுமா உனக்குப் புரியலை? உன் வீட்ல திருட வந்திருக்கேன். ம்... உன்கிட்ட இருக்குற பணம் எல்லாத்தையும் கொடு. இல்லைனா என்ன நடக்கும் தெரியுமா?’’
“சரி, சரி... உனக்குப் பணம்தானே வேண்டும்? என்னைத் தொந்தரவு செய்யாதே! நீயே போய் எடுத்துக்கொள். அதோ... அந்த மேசை இழுப்பறையில் சிறிது பணம் வைத்திருக்கிறேன்’’ என்ற ஜென் துறவி ஷிசிரி அவர்கள், மீண்டும் புத்த ஜாதகக் கதையைப் படிப்பதில் ஆழ்ந்துபோனார்.
திருடன் அசந்துபோனான். `இப்படியும் ஒரு மனுசனா? என் கையில இருக்குற கத்தியைப் பார்த்துக்கூட இந்த ஆளுக்குப் பயம் வரலையே! இப்படியெல்லாம் யோசித்தவனாக அவன் ஜென் துறவி காட்டிய மேசையருகே போனான்.
மேசையைத் திறந்தான். அதிலிருந்த மொத்தப் பணத்தையும் அப்படியே எடுத்தான். அப்போது ஷிசிரி அவர்களின் குரல் கேட்டது.
“என்னப்பா பணத்தை எடுத்துவிட்டாயா? நான் சொன்னேன் என்பதற்காக மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடாதே. நாளை நான் செலுத்தவேண்டிய வரி பாக்கி கொஞ்சம் இருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பணத்தைமட்டும் எனக்காக வைத்துவிடு. என்ன... சரியா?’’
திருடன் யோசனையுடன் அவரைப் பார்த்தான். அந்தத் துறவியின் குரல் அவனை என்னவோ செய்தது. அவனால் அதை அலட்சியம் செய்ய முடியவில்லை. எடுத்த மொத்தத் தொகையிலிருந்து சிறிது பணத்தை எடுத்து மேசை இழுப்பறையில் வைத்தான். கிளம்பினான். அவன் வாசல் கதவை அடைந்தபோது, ஷிசிரி அவர்களின் குரல் அவனைத் தடுத்தது.
“ஏனப்பா... வந்தாய், என் பணத்தை எடுத்தாய். ஒரு நன்றிகூடச் சொல்லாமல் போகிறாயே... இது உனக்கே சரி எனப்படுகிறதா?’’
திருடன் அதிர்ந்து போனான். இவ்வளவு துணிவுடன் தன்னிடம் பேசும் ஒரு மனிதரை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. அவன் ஷிசிரி அவர்களின் அருகே வந்தான். “எனக்குப் பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஐயா...’’ என்றான். வெளியேறினான். ஷிசிரி அவர்கள் மறுபடியும் வாசிப்பதில் ஆழ்ந்துபோனார்.
அந்தத் திருடன் வெகுநாள்களாக, உள்ளூர் காவலர்களால் தேடப்பட்டு வந்தவன். ஷிசிரி அவர்களின் ஆசிரமத்திலும் அவன் கைவரிசைக் காட்டிய செய்தி வெளியே பரவியது. காவலர்கள் தங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். ஒரு நாள் அவன் மாட்டிக்கொண்டான். விசாரணை நடந்தது. ஷிசிரி அவர்களின் ஆசிரமத்தில் திருடியதற்கு சாட்சி சொல்லும்படி அவருக்கு அழைப்பு போனது. அவரும் வந்தார், அவரிடம் விசாரித்தார்கள்.
“இவன் என்னிடம் எதையும் திருடவில்லை. என்னிடமிருந்து சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டான். அதற்கு நன்றிகூட சொல்லிச் சென்றான்” என்றார் ஷிசிரி கோஜுன். அப்படி அவர் சொன்னது அவன் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. ஆனாலும், பிற குற்றங்களுக்காக அந்தத் திருடன் சிறையில் அடைக்கப்பட்டான். வெளியே வந்ததும், அவன் ஷிசிரி அவர்களிடமே சீடனாகச் சேர்ந்தான். பல ஆண்டுகள் அவருடன் இருந்து ஞானமும் பெற்றான்.
கருணை... இதைப்போல மனிதர்களைக் கலங்கடிக்கச் செய்யும் சிறந்த ஆயுதம் வேறு இருக்க முடியாது. அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருந்தார் ஜென் துறவி ஷிசிரி. அதற்கான பலன் கிடைத்தது. அதோடு, திருட வந்தவனுக்கே நன்றி சொல்லிப் பணம் பெற்றுச் செல்லும் பண்பைக் கற்றுக்கொடுத்தது அவர் திறமை.
இரக்கம், கருணை இந்தக் குணங்களுக்கு எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சக்காரரையும் கரைய வைக்கும் சக்தி உண்டு. ஜென் தத்துவம் காலம் காலமாக வலியுறுத்துவது இந்தக் குணங்களைத்தான்

No comments:

Post a Comment