Thursday, 18 June 2020

கோவிட்-19 கட்டுப்பாடுகளால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மனிலா வளைகுடாவில் நிற்கும் கப்பல்கள்

ஏறத்தாழ 220 நாடுகள், அறுபதாயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது - IOM அமைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளைநோய் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் உலகெங்கும் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளால், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்றநிலையை உணர்ந்து வருகின்றனர் என்று, ஐ.நா. நிறுவனத்தின், IOM எனப்படும் புலம்பெயர்ந்தோர் அமைப்பு, ஜூன் 12,  இவ்வெள்ளியன்று கூறியது.
ஏறத்தாழ 220 நாடுகள், அறுபதாயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும், பாரம்பரியமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியிருந்த சுற்றுலா, கட்டுமானப்பணிகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் துன்புறுகின்றனர் என்றும், IOM அமைப்பு கூறியது.
நாடுகளில் தங்கும் அனுமதி, வேலைக்கான ஒப்பந்தம் போன்றவை காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த தொழிலாளர்கள் நாடுகளைவிட்டு வெளியேற்றப்படும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அந்த அமைப்பு கூறுகிறது.
அந்நியர் மீது வெறுப்பு, வீடற்றநிலை, தடுப்புக்காவல் மையங்களில் அதிக எண்ணிக்கை  போன்ற பிரச்சனைகளையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும், தற்போது 17 நாடுகள் இவர்கள் அதிகம் இன்னல்களைச் சந்திக்கின்றனர் என்றும் அந்த ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.
கப்பல் பணியாளர்கள்
மேலும், இந்த கொள்ளைநோய் காலத்தில், கப்பல் தொழிலாளர்கள், கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்தமுடியாமல் துன்புறும்வேளை, அவர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான மற்றும், பாதுகாப்பு நெருக்கடிகள் களையப்பட, ஐ.நா. பொதுச்செயலரின் சார்பில் அவரது பேச்சாளர் உலகை கேட்டுக்கொண்டுள்ளார். 
சில கப்பல் பணியாளர்கள், குறைந்தது 15 மாதங்களாக கடலிலேயே இருக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ள அந்த பேச்சாளர், உலகில் வர்த்தகப் பொருள்களில் 80 விழுக்காட்டுக்குமேல் வர்த்தகம் செய்யும் கப்பல் தொழில்துறை மீது, தற்போதைய நெருக்கடிநிலை, நேரடியாக எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூரில் 17 இலட்சம் புலம்பெயர்ந்தோரின் வருங்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. (UN)

No comments:

Post a Comment