Thursday, 18 June 2020

வாழ்வை ஒரு வரலாறாக மாற்றுவோமா?

எத்தியோப்பியாவில் அசத்தும் தமிழர் கண்ணன் அம்பலம்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்வைத் தீர்மானிக்கும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே” - சுவாமி விவேகானந்தர்.
மேரி தெரேசா: வத்திக்கான்
எத்தியோப்பியா
ஆப்ரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் எத்தியோப்பியா, உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்று. நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டுள்ள இந்நாடு, உலகில் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ள நாடுகளில், மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடும் ஆகும். 19ம் நூற்றாண்டில் நிலவிய நீண்டகால ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் சிக்காமல் இறையாண்மையுடன் விளங்கிய இரு ஆப்ரிக்க நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. மற்றொன்று, லைபீரியா. எனினும், எத்தியோப்பியா, 1936ம் ஆண்டில், இத்தாலியின் காலனியாக மாறி, இரண்டாவது உலகப் போரின்போது, விடுதலை பெற்றது. பழங்கால எழுத்துமுறைகளில் ஒன்றாகிய, கெஜ் (Ge'ez) எழுத்துமுறை இன்றும் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆப்ரிக்காவிலேயே தொடர்ச்சியான நீண்ட மலைகளையும், ஆப்ரிக்காவிலேயே நீண்ட Sof Omar குகைகளையும் கொண்டிருக்கும் எத்தியோப்பியாவின் மேற்கே பரந்த செழிப்பான சமவெளி உள்ளது. உலகின் நீளமான நைல் நதியில் இருந்து பிரிந்துவரும், நீல நைல் நதியும், வெள்ளை நைல் நதியும், இந்நாட்டிற்கு நீராதாரங்கள். மேலும், எண்ணற்ற ஆறுகளும், காடுகளும், வனவிலங்குகளும் நிறைந்துள்ள அழகிய ஒரு பூமியாகிய எத்தியோப்பியாவில். ஏறத்தாழ எண்பது இனக் குழுக்கள் வாழ்கின்றன. ஆப்ரிக்காவில், மிகுந்த இறைநம்பிக்கை கொண்டுள்ள ஒரே நாடு எனவும் சொல்லப்படுகிறது.
எத்தியோப்பியாவின் மக்கள் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் சிறந்தவர்கள். ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளவர்கள். இவர்கள், ஒரு குதிரை ஓடுவதைவிடவும் அதிகமாக ஓடும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த வலிமை இவர்களுக்கு இயல்பாக கிடைக்கப்பெற்றது என்று கூறப்படுகிறது. இந்நாடு இவ்வளவு சிறப்புக்களைக் கொண்டிருந்தாலும், உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது. அதேநேரம், வேற்று நாட்டவர் எவரும், இவர்களின் மண்ணில் குடியேறவோ, ஆட்சி செய்யவோ, உரிமை கொண்டாடவோ முடியாதாம். ஆனால், மதுரையில் இருந்து எத்தியோப்பியாவிற்கு கல்விப் பணியாற்றச் சென்ற தமிழர் ஒருவர், அம்மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். கண்ணன் அம்பலம் என்ற 43 வயது நிரம்பிய பேராசிரியர்தான் இந்த தமிழர். இந்தியாவில் IAS படிப்பை முடித்து ஆட்சியராகி, மக்களுக்குத் தொண்டுசெய்ய ஆவல் கொண்டிருந்த கண்ணன் அவர்கள் பற்றி, பல்வேறு தமிழ் ஊடகங்கள் சுவையான செய்திகளை வெளியிட்டிருந்தன.
எத்தியோப்பியாவில் அசத்தும் தமிழர்
பேராசிரியர் கண்ணன் அவர்கள், மதுரை அலங்காநல்லூரில் இருந்து ஏழு கி.மீ., தொலைவிலுள்ள, பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர்,  சென்னையில் சில காலம் வேலைதேடி அலைந்தார். அச்சமயத்தில் இவருக்கு, எத்தியோப்பியாவில் வேலை கிடைத்துள்ளது. இவர், அந்நாட்டில், nekemte என்ற, ஒரு சிறிய சந்தை நகரத்தில் உள்ள, வொலிகா பல்கலைக்கழகத்தில் (Wollega University -WU), பொது நிர்வாகத்துறையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, முதுநிலை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன் அவர்கள், அந்நாட்டு மலைவாழ் கிராம மக்களுக்கு நல்ல குடிநீரும், நடப்பதற்கு பாலமும் அமைத்துக்கொடுத்துள்ளார். இதுவரை 43 சிறிய பாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், ஒரு சிறிய அணை, ஒரு கழிப்பிடம் போன்றவற்றைக் கட்டியிருக்கிறார். பேராசிரியர் கண்ணன் அம்பலம் அவர்கள் சொல்கிறார்... எத்தியோப்பியாவில், ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும், அம்மக்கள் இயல்பிலே மிகவும் அன்பானவர்கள். சகமனிதர்களை அளவுகடந்து அன்புகூர்பவர்கள். மற்றவர்கள், இவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. எனவே, இவர்களுக்காக யாரேனும் உதவ முன்வந்தால் அவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். ஆரம்ப காலத்தில் இந்த மக்களின் வாழ்க்கை முறையை பழகிக்கொள்வது கடினமாகவே இருந்தது. இன்று இவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.
களப்பணி அனுபவம்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக இங்குள்ள மலைக்கிராமங்களுக்கு களப்பணிக்குச் சென்றேன். அப்போது கிடைத்த அனுபவம் என்னை வெகுவாக பாதித்தது. மேற்கு எத்தியோப்பியாவின் நெகிம்டே நகர் பகுதியில் ஆண்டிற்கு நான்கு மாதங்கள் அடைமழை பொழியும். அந்நகரை அடுத்துள்ள மலைக் கிராமங்களில், மக்கள் ஆற்றைக் கடந்து செல்கையில் பலர் உயிரிழந்து வந்தனர். இந்தக் கிராமங்களில் மிக முக்கிய பிரச்சனை குடிநீர். இங்குள்ள ஓடைகளில் நீர், வண்டல் மண்ணுடன் கலந்துவரும். மக்கள் அதை அப்படியேதான் குடித்துவந்தனர். குட்டைபோல தேங்கிக்கிடக்கும் நீரையும் பயன்படுத்தினர். கால்வாய்கள் அமைத்து ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை, இங்குள்ள மக்களுக்குத் தெரியவில்லை. போதிய கல்வி வாய்ப்பும், விழிப்புணர்வும் இல்லாததும் ஒரு காரணம். அரசியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. இளைஞர்கள் தங்களின் கிராமங்களை முன்னேற்ற மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர். ஆனால், போதிய வழிகாட்டுதல் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் காலணி அணிவதில்லை. கரடுமுரடான பாதைகளை சர்வசாதாரணமாகக் கடக்கின்றனர். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல, சாலை வசதிகள் கிடையாது. ஆறு, ஓடைகளைக் கடக்க பாலங்கள் கிடையாது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவை அனைத்தையும் பார்த்துவிட்டு என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை. இவர்களுக்கு என்னால் முடிந்த ஏதோ ஒன்றைச் செய்ய நினைத்தேன். எனவே, பல்கலைக்கழக மாணவர்களை களப்பணியில் ஈடுபட அறிவுறுத்தினேன்.
மாணவர்களை, அவர்கள் வாழும் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை அடையாளப்படுத்தச் சொன்னேன். அதற்குத் தீர்வு காண, ஆலோசனைகளை வழங்கினேன். அதோடு நிறுத்திவிடாமல் களத்தில் இறங்கி பணி செய்யத் தொடங்கினோம். தற்போது பல மாணவர்கள் அவர்கள் வாழ்கின்ற பகுதியின் பிரச்சனைகளுக்கு, அவர்களே தீர்வு காணத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றம் அவர்களுக்கே வியப்பாக இருக்கிறது. மலைக்கிராமத்தின் பல இடங்களில், இயற்கை முறையில் வடிகால் அமைத்திருக்கிறோம். இதனால், அசுத்த நீர் வடிகட்டப்பட்டு, பயன்படுத்த ஏதுவாக மாற்றப்படுகிறது. எனக்குத் தெரிந்த சில அரசியல் தலைவர்களின் உதவியோடு, உள்ளூர் மக்களையும், என் மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மலைப்பகுதிகளில் சிறிய பாலங்களை அமைத்திருக்கிறோம். நீண்ட நாட்களாக சிரமத்தைச் சந்தித்துவந்த மக்களுக்கு இது பேருதவியாக இருக்கிறது. பலரும் என்னைச் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். எனக்கும் அது மிகப்பெரும் மனநிறைவை தந்திருக்கிறது. இன்னும் அனைத்துத் தரப்பில் இருந்தும் போதிய ஒத்துழைப்பு கிடைத்தால், இங்குள்ள மக்களின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். உண்மையில் இம்மக்களுக்கு உதவி தேவை. இவ்வாறு பேராசிரியர் கண்ணன் அம்பலம் அவர்கள் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். கண்ணன் அவர்கள், தனது களப்பணி பற்றி சன் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு சொல்லியுள்ளார். ஆம். சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, எதுவுமே தூசிதான்.
மதுரை மாணவி நேத்ரா
மதுரையில் தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்துவரும் நேத்ரா என்ற மாணவி, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருகிறார். முடிதிருத்தம்செய்யும் கடை நடத்திவரும் இவரது தந்தை மோகன் அவர்கள், தனது மகளின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ஐந்து இலட்சம் ரூபாயை, கோவிட்-19 ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செலவழித்து வருகிறார். இந்நிலையில் மாணவி நேத்ரா அவர்கள், ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டங்களில் உரையாற்றவும் அவருக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
114 வயது நிரம்பிய தேங்காய் வியாபாரி
இந்த கோவிட்-19 துன்ப காலத்தில் பலர் பல வழிகளில் துன்புறும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தஞ்சாவூரில் ஒவ்வொரு தெருவாகச் சென்று மிட்டாய் வியாபாரம் செய்துவந்த 114 வயது நிரம்பிய முகமது அபுசாலி அவர்கள், இந்த கொள்ளைநோய் தாக்கத்தில் வெளியே செல்ல இயலாமல், தேங்காய் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அந்தக் காலத்தில் மியான்மாரில் உருவான கலகத்தில் தன் குடும்பத்தினரை இழந்து தனியாக சென்னை வந்த இவர், அன்றிலிருந்து இன்றுவரை, தனக்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறார்.
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஆயிரம் குறைகளைக் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். இதை நினைத்து, இலட்சியத்தில் மட்டும் பின்வாங்கக் கூடாது. தடைகளைக் கடந்து, சாதிக்கும் வெற்றிக்கு என்றுமே ஒரு வரலாறு உள்ளது. “நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்வைத் தீர்மானிக்கும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே, வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்வாகும்” என்றார் சுவாமி விவேகானந்தர். அப்துல் கலாம் அவர்கள், நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்கவேண்டும் என்று சொல்லி அதன்படியே வாழ்ந்து காட்டியவர். நம் வாழ்வையும் ஒரு வரலாறாக மாற்றுவோமா...

No comments:

Post a Comment