மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இலங்கையில், வருகிற வாரத்தில், பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளவேளை, நேர்மையோடு நாட்டை ஆளும் ஓர் அரசு உருவாக்கப்படுவதற்கு, அந்நாட்டு கிறிஸ்தவர்கள், இறைவனை உருக்கமாய் மன்றாடி வருகின்றனர் என்று, யூக்கா செய்தி கூறுகிறது.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்தல்களை, கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக, முதலில் ஜூன் 20ம் தேதிக்கு மாற்றிய இலங்கை தேர்தல் ஆணையம், பின்னர், அதனை, வருகிற ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஆகஸ்ட் 05, வருகிற புதன்கிழமையன்று நடைபெறவுள்ள இப்பொதுத்தேர்தல் குறித்து மனித உரிமை ஆர்வலர் அருள்பணி Reid Shelton Fernando அவர்கள், யூக்கா செய்தியிடம் பேசியவேளையில், ஒன்றிணைந்த மற்றும், சுதந்திர நாடாக அமைக்கும் நற்பண்புகள் உள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்குப் பெரியதொரு பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
தன்னலம், ஊழல் போன்ற பாதைகளைத் தெரிவுசெய்யாமல் இருக்கும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுமாறும், அவர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி, இத்தகைய குணநலன்களைக் கொண்டிருக்கவேண்டும் என, கிறிஸ்தவர்கள் எல்லாரும் இறைவேண்டல் செய்கின்றனர் என்றும், அருள்பணி Fernando அவர்கள் கூறினார்.
இலங்கையில், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கென, இருபது அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களும், 34 தனிப்பட்ட குழுக்களைச் சார்ந்தோரும் போட்டியிடுகின்றனர்.
இணையத்தில் தேர்தல் நிலவரத்தைக் கண்காணிக்கும், ஒளிவுமறைவற்ற பன்னாட்டு அமைப்பின் இலங்கை கிளை (TISL) வெளியிட்டுள்ள தகவலின்படி, தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச்சொத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான 103க்கும் அதிகமான புகார்கள், இதுவரை வந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. (UCAN)
No comments:
Post a Comment