கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
சாலையில் நூல் பிடித்ததுபோல் தண்ணீரால் கோடு போட்டுக்கொண்டு போன குடிநீர் வண்டியைப் பார்த்தபோது, சரவணனுக்கு கோபம் கோபமாக வந்தது!
தண்ணீர் குழாயை ஒரு சுத்து சுத்தி இறுக்கினா இப்படி கொட்டுமா? இந்தத் தண்ணீரைச் சுத்தப்படுத்த, எத்தனை இலட்சத்துல, அந்த முறை, இந்த முறை, குளோரின்னு. எவன் அப்பன் வீட்டு சொத்து... நானும், நீயும் கொட்டுன வரிப்பணம்... தண்ணீர் குழாயை சரியா மூடாமல் போன குடிநீர் லாரி டிரைவரை இழுத்து வச்சு ஒண்ணு வைக்கணும்! சரவணனின் கோபம் தலைக்கேறுவதற்குள், லாரி தூரத்தில் மறைந்து விட்டிருந்தது.
இருசக்கர வாகனத்தை தாழ்வாரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையப் போனவர் செவிகளில், அவர் மனைவி, தன் மகனிடம் புலம்பிக் கொண்டிருப்பது கேட்டது!
'உங்கப்பனுக்கு எத்தனைவாட்டி சொல்லு, புத்தில ஏறாது. கிச்சன் சிங்க்ல ஒரு வாரமா தண்ணி ஒழுகி வீணாப் போவுது, ஒரு பிளம்பரை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணச் சொன்னா கேக்குறாரா? இப்படி ஒவ்வொரு வீட்லயும் ஒரு அப்பன் இருந்தா ஏன் தண்ணீர்ப் பஞ்சம் வராது' என்று மனைவி கூறயதைக் கேட்டபோது, யாரோ கன்னத்தில் அடிப்பதுபோல் இருந்தது சரவணனுக்கு! அப்போதே கையோடு பிளம்பரை அழைத்துவரக் கிளம்பினார் அவர்.
No comments:
Post a Comment