Tuesday, 25 August 2020

ஏழைகளுக்குரிய திட்டங்களை செயல்படுத்த ஒன்றிணையுங்கள்

 திருத்தந்தையுடன் சீரோ மலபார் திருஅவை தலைவர்கள்


கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில், மேலும் ஏழைகளாக மாறியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக அதிக ஈடுபாட்டுடன் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட் -19 கொள்ளைநோய் பரவத் துவங்கிய காலத்திலிருந்து, ஏழை மக்களுக்கென இதுவரை 73 இலட்சம் டாலர்களை செலவிட்டுள்ளதாக, இந்தியாவின், சீரோ மலபார் ஆயர் மன்றம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 61 சீரோ மலபார் ஆயர்கள் கணனி காணொளி தொடர்பு வழியாக கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், நாட்டில், விவசாய, மற்றும், தொழில் உற்பத்தியைப் பெருக்கவும், ஏழைகளுக்குரிய திட்டங்களைச் செயல்படுத்தவும், அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை  முன்வைத்தனர்.

காணொளி வழியாக நடத்தப்பட்ட சீரோ மலபார் ஆயர் மன்றத்தின் 28வது கூட்டத்தில், இந்த கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில், ஏழைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தே அதிகமாக விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 கொள்ளைநோயின் பாதிப்புகள், மற்றும், இதனால் ஏழையான மக்களுக்கு உதவுதல் என்பது குறித்து விவாதித்த சீரோமலபார் ஆயர் மன்றத்தின் காணொளி வழியான இரண்டாவது கூட்டம், இம்மாதம் 19ம் தேதி முதல் 21 வரையில் இடம்பெற்றது. இவர்களின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 7 முதல் 15 வரை இடம்பெற்றிருந்தது.

காணொளி வழியாக இடம்பெற்ற இக்கூட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றிய சீரோ மலபார் கர்தினால், ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள், இந்த கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் மேலும் ஏழைகளாக மாறியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக அதிக ஈடுபாட்டுடன் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் நோக்கப்படாமல், அனைவருக்கும் உணவு கிட்டவேண்டும் என்ற நோக்கத்தை மையம் கொண்டதாக சீரோ மலபார் திருஅவை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்குரிய சிறந்த வழி, ஏழைகளுக்கும் பசியால் இருப்போருக்கும் உணவு வழங்குவதேயாகும் என்பதையும் வலியுறுத்தினார். (AsiaNews)

No comments:

Post a Comment