கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளை நோய்க்கெதிரான போராட்டத்தில், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உழைப்பதுடன், தடுப்பு மருந்து, ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமாவதைத் தடுக்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார், WHO எனும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus.
தங்கள் மக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆவல், ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் இருப்பினும், இந்நோய்க்கெதிரான முயற்சிகள் ஒன்றிணைந்ததாக இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் அவர் முன்வைத்தார்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மக்களைக் காப்பாற்றுவதால் மட்டும் இந்நோயை உலகிலிருந்து விரட்டிவிட முடியாது என்பதை உணர்ந்தவர்களாக, அனைத்து மக்களையும் காப்பாற்றும் வகையில், நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தை, உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் விடுத்துள்ளார் Ghebreyesus.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின், அதனை, ஒரு நாட்டிற்கு என மட்டும் சொந்தம் கொண்டாடுவது, பிறரன்பாக இருக்கமுடியாது எனவும் கூறினார், உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் Ghebreyesus.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் அதனை, கொள்ளைநோயின் பிடியிலிருக்கும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்திய Ghebreyesus அவர்கள், புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும்போது, யார் யாருக்குத் தேவையோ, அதனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குக் கிடைக்கும்வகையில் வழிவகை செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அறிவியல் வளர்ச்சி கண்டுவரும் காலங்களில், கொள்ளைநோய்க்கெதிரான தீர்வுகளைக் கண்டுகொள்ள ஒருவருக்கொருவர் ஒருமைப்பாடு தேவைப்படுகின்றது என்பதையும் எடுத்துரைத்தார், WHO நிறுவனத் தலைவர் Ghebreyesus.
ஏற்கனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் புதன் மறைக்கல்வியுரையின்போது, கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்யப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நாடும், தடுப்பு மருந்தை தங்களுக்கு மட்டும் எனச் சொந்தம் கொண்டாடாமல், அனைவருக்கும் இம்மருந்துகள் கிடைக்கும்படியாக இருக்கவேண்டும் என்பது திருத்தந்தையின் விண்ணப்பமாக உள்ளது.
No comments:
Post a Comment