Thursday, 20 August 2020

வெற்றியா, நன்மதிப்பா, எது சிறந்தது!

 சர் சந்திரசேகர வெங்கட் இராமன்

வெற்றி பெற்ற மனிதராக வலம்வருவதைவிட மக்களின் நன்மதிப்பை பெற்றவராக வாழ்ந்து மறைபவர்களே வரலாற்றில் தடம் பதிக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவுக்குப் பெருமைத் தேடித்தந்த, தமிழரான உலகப் புகழ்பெற்ற இயற்பியல் மேதை, சர் சந்திரசேகர வெங்கட் இராமன் அவர்கள், ஒளிச்சிதறலின் விளைவுகள் பற்றிய (இராமன் விளைவு Raman effect)  என்ற கண்டுபிடிப்பிற்காக, 1930ம் ஆண்டில் நொபெல் இயற்பியல் பரிசு பெற்றவர். சர் சி.வி இராமன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர், 1948ம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது பணி ஓய்வுக்குப்பின், பெங்களூருவில் ஓர் ஆய்வு நிறுவனம் தொடங்குவதற்கு விரும்பினார். எனவே, மூன்று இயற்பியல் வல்லுனர்கள் தேவை என்று, செய்தித்தாள்களில் அவர் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்த பல அறிவியலாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். தாங்கள் அந்த வேலைக்குத் தெரிவுசெய்யப்படாவிட்டாலும், நொபெல் பரிசு பெற்ற அந்த மேதையைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். முதல்கட்ட நேர்முகத் தேர்வில ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிகட்ட நேர்முகத் தேர்வை பேராசிரியர் சர் சி.வி. இராமன் அவர்களே நடத்தினார். அவர் நடத்திய நேர்முகத் தேர்வில், அந்த ஐவரில் மூவரை அவர் தெரிவு செய்தார். அடுத்த நாள் காலையில் அவர், நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில், ஓர் இளைஞர் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை, அவர் கண்டார். அந்த இளைஞர், முந்திய நாள் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்படாத இளைஞர் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். சர் சி.வி. இராமன் அவர்கள், அந்த இளைஞரை அணுகி, உனது பிரச்சனை என்னவென்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர் இவ்வாறு சொன்னார். எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை. நேற்று நேர்முகத் தேர்வு முடிந்ததும், தங்கள் அலுவலகம் எனக்குத் தரவேண்டிய பணத்தைவிட ஏழு ரூபாய் அதிகமாகத் தந்தது. எனவே அதை நான் அந்த அலுவலக அதிகாரியிடம் திரும்பக் கொடுக்க விரும்பினேன். ஆனால் அவர், கணக்கு எல்லாவற்றையும் முடித்துவிட்டோம். அதனால் அந்த பணத்தைத் நாங்கள் திரும்பப் பெற முடியாது. அதை நீ எடுத்துக்கொண்டுபோய் அனுபவி என்று சொன்னார். அதற்கு நான், எனக்குச் சேராத அந்த பணத்தைப் பெற்றுக்கொள்வது சரி என்று எனக்குத் தோன்றவில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்த இளைஞர் கூறியதைக் கேட்ட சர் சி.வி. இராமன் அவர்கள், இதுதான் உன் பிரச்சனையா, அந்த ஏழு ரூபாயைத் திருப்பித்தர விரும்புகிறாய், அப்படித்தானே என்று கேட்டார். ஆமாம் என்று அந்த இளைஞர் சொன்னதும், அந்த ஏழு ரூபாயை அந்த இளைஞரிடமிருந்து, அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த இளைஞரிடம், நாளை 10.30 மணிக்கு என்னை அலுவலகத்தில் வந்து பார் என்று அவர் சொல்லிச் சென்றார். நொபெல் விருது பெற்றவரைப் பார்ப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த நாள் அலுவலகம் சென்றார் அந்த இளைஞர். சர் சி.வி. இராமன் அவர்கள் அந்த இளைஞரிடம், நீ இயற்பியல் தேர்வில் தோல்வியுற்றாய், ஆனால் நேர்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாய். எனவே உனக்காக மற்றொரு வேலையை உருவாக்கியுள்ளேன் என்று சொல்லி அனுப்பினார். வியப்பில் ஆழ்ந்த அந்த இளைஞர், வேலையிலும் மகிழ்வுடன் இணைந்தார். அந்த இளைஞர்தான், 1983ம் ஆண்டில் நொபெல் இயற்பியல் பரிசு பெற்ற, பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர். இவர், கருந்துளைகள் சார்ந்த இயற்பியல் விதிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழர். இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமை பெற்றவர். பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர் அவர்கள், அந்த ஏழு ரூபாய் தன் வாழ்வை எவ்வாறு மாற்றியது என்பது பற்றி, ஒரு நூலையே எழுதியுள்ளார்.

நமக்குத் திறமைகளில் குறைபடுவதை, கடின உழைப்பு, பிறரது வழிகாட்டல், உதவி போன்றவை வழியாக வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், பண்பிலும், நல்ல விழுமியங்களிலும் குறைபடுவதை எவற்றாலும் ஒருபோதும் சரிகட்ட முடியாது. இதனால்தான், உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களும், “வெற்றிபெற்ற மனிதராக ஆவதற்கு முயற்சி செய்யாதே, மாறாக, நல்ல மதிப்பீடுகளைக்கொண்ட,  மதிப்புமிக்க மனிதராக மாற எப்போதும் முயற்சி செய்” என்று கூறியுள்ளார். 

ஆசிரியர் ஜெய மேரி

தற்போதைய கொரோனா தொற்றால், பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தெரியாத நிலை நிலவுகிறது. இவ்வேளையில், தமிழகத்தில் ஆசிரியர் ஒருவர், தன் வீட்டையே பள்ளியாக்கியுள்ளார். சிவகாசி கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், மாணவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து, சமுதாய இடைவெளியுடன், பாடம் கற்றுத் தருகிறார். கொரோனா தொற்றால் தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளைத் துவங்க, கிராம மாணவர்களுக்கு என்ன செய்வது என சிந்தித்த ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், அருகாமைப் பள்ளிகள் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டின் அருகில் உள்ள பத்து மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து, சமுதாய இடைவெளியுடன், புத்தக வாசிப்பு, கதை, ஆடல், பாடல் மற்றும், ஓவியங்களுடன் பாடம் கற்றுத்தர இவர் ஆரம்பித்துள்ளார். அதோடு, சிறார் நூலகம் ஒன்றைத் தொடங்கி, புத்தகங்கள் வாசிக்கவும் இவர் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கு வானம் பதிப்பக முகநுால் நண்பர் அனுப்பிய புத்தகங்கள் கை கொடுத்துள்ளன என்று, ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர், மாணவர்கள் போக்கில் பாடம் கற்பிப்பதால், இவரிடம் பாடம் கற்க, மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என்று, ஊடகங்கள் அவரைப் பாராட்டியுள்ளன.

கிராம நிர்வாகி துரை பிரிதிவிராஜ்

“மற்றவர்களுக்காக வாழும் வாழ்வே, ஒரு பயனுள்ள வாழ்வாகிறது (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)” என்ற கூற்றிற்கேற்ப, சிவகாசி ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், வளரும் தலைமுறைக்கு ஒரு பயனுள்ள வாழ்வுமுறையை அமைத்துக் கொடுத்து வருகிறார். அதோடு, சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்ற மனிதராகவும், இவர் திகழ்ந்துள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரும், மக்களால் போற்றப்பட்டு வருகிறார். கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாகியான துரை பிரிதிவிராஜ் அவர்கள், பல ஆண்டுகளாக, இரத்ததானம் செய்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், புற்றுநோயாளிகள், விபத்தில் சிக்கியவர்கள், மற்றும்,  இயலாதவர்கள் போன்றோர்க்கு, பல்வேறு உதவிகளை ஆற்றி வருகிறார். அரசுப்பணியில் நேர்மையானவர் என பெயர் எடுத்த பிரிதிவிராஜ் அவர்கள்,  இன்றைய கொரோனா காலக்கட்டத்திலும், கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதுமுதிர்ந்தோர் போன்றோர் கேட்கும் சான்றிதழ்களை, அவர்கள் இல்லங்களைத் தேடிச்சென்று வழங்கி வருகிறார். அதோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் இவர் செய்து வருகிறார். தன் தம்பியின் நினைவாக 'ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை', 'அப்துல் கலாம் மனநிறைவு இல்லம்' ஆகியவற்றையும் இவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்புகள் வழியாக, கட்டணம் இல்லா அவசர மருத்துவ வாகனத்தைப் பயன்படுத்தி பல உயிர்களை இவர் காப்பாற்றியுள்ளார். தற்போது நான்கு படுக்கைகள்கொண்ட ஒரு வாகனத்தை மேலும் வாங்கி மக்களுக்கு அவர் சேவையாற்றி வருகிறார். பிரிதிவிராஜ் அவர்கள், அந்த வாகனத்தில் 'அன்பு ஒன்றே கட்டணம்' என எழுதி வைத்துள்ளார். இதற்காக இவர் மாத வருமானத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறார். வாழும் காலத்தில் துன்புறுவோருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே எனது இலட்சியம். அந்த பணிக்கு நண்பர்களும் உதவி செய்கிறார்கள் என்று, அரசு அதிகாரி பிரிதிவிராஜ் அவர்கள் சொல்லியுள்ளார்.

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை மக்களுக்கென தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த, 5 ரூபாய் டாக்டர் என மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் அவர்கள், ஆகஸ்ட் 15 இச்சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். டாக்டர் கட்டணமாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம் அவர்கள், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் அவரின் பெயரைவிட 5 ரூபாய் டாக்டர் என்று கூறினால்தான், அனைவருக்கும் தெரியும். 2017-ம் ஆண்டு சிறந்த மனிதர் என்ற விருது, அவருக்கு வழங்கப்பட்டது. புகழுக்கும் பெயருக்கும் ஆசைப்படாத டாக்டர் திருவேங்கடம், தன்னுடைய சேவையை மட்டும் கடைசிவரைத் தொடர்ந்தார். 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் அவர்கள், எளிமையாகவே வாழ்ந்து, மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்துள்ளார்.

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய அடிமைமுறையை அழிக்க அரும்பாடுபட்ட ஆபிரகாம் லிங்கன் அவர்கள், (ஏப்ரல் 14, மாலை 1865) சுடப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வேளையில், அவரது மரணப்படுக்கைக்கு அருகில் நின்ற Edwin Stanton என்பவர், “இப்போது இவர் சகாப்தத்திற்கு உரியவராகிவிட்டார்” என்ற பிரபலமான ஒரு கூற்றை அறிவித்தார். Edwin Stanton அவர்கள், அமெரிக்க உள்நாட்டுப்போரின்போது, போர் குறித்த துறைக்குச் செயலராகப் பணியாற்றியவர். மேலும், ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இறந்து சில நாள்களுக்குப்பின், கார்ல் மார்க்ஸ் அவர்கள், பன்னாட்டு உழைப்பாளர் அமைப்பின் சார்பாக எழுதுகையில், “லிங்கன் அவர்கள், நல்ல மனிதர் என்பதோடு நின்றுவிடாமல், தலைச்சிறந்த மனிதராகவும், வெற்றி பெற்ற அரிய மனிதர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்” என்று பாராட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற மனிதராக வலம்வருவதைவிட மக்களின் நன்மதிப்பை பெற்றவராக வாழ்ந்து மறைபவர்களே வரலாற்றில் தடம் பதிக்கின்றனர். இக்காலக்கட்டத்தில், கோவிட்-19 கொள்ளைநோய் ஊரடங்கைப் பயன்படுத்தி, நாடுகள் ஏழை எளிய மக்களை முடக்கும் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள EIA எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 போன்றவை, பெரும்பாலான மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளன. மக்களின் கொந்தளிப்பை அல்ல, நன்மதிப்பைப் பெறுவதே, எந்த ஓர் அமைப்பின் வெற்றிக்கு மகுடம் சூட்டும். எனவே, நாம் நல்ல மனிதர்களாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...