ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
காலரா கொள்ளைநோயிலிருந்து தங்கள் பங்குமக்களைக் காத்ததற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பிட்ஸ்பர்க் நகரின் ஒரு பங்குத்தளத்தில், கடந்த 170 ஆண்டுகளாக குறிப்பிட்ட நாள்களில் நன்றித் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
1849ம் ஆண்டு, பென்சில்வேனியா மாநிலத்தை காலரா கொள்ளைநோய் தாக்கியவேளையில், பிட்ஸ்பர்க் நகரின் புனித மைக்கிள் கத்தோலிக்க பங்கு பெருமளவு பாதிக்கப்பட்டதையடுத்து, அப்பங்கில் பணியாற்றிய அருள்பணியாளர், அன்னை மரியா, மற்றும் புனித ரோச் ஆகியோரின் பரிந்துரையை மக்கள் நாடுமாறு அழைப்பு விடுத்தார்.
1849ம் ஆண்டு காலரா நோயினால் பிட்ஸ்பர்க் நகரில் 1000த்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் என்பதும், புனித மைக்கிள் பங்கு மக்களின் வேண்டுதலையடுத்து, 1853ம் ஆண்டு, மீண்டும் ஒருமுறை காலரா நோய் தாக்கியவேளையில், அப்பங்கில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்பதும், குறிப்பிடத்தக்கன.
இத்தாலி நாட்டில், நோயுற்றோரைப் பராமரித்த புனித ரோச், மற்றும் அன்னை மரியா ஆகியோரின் பரிந்துரையால், புனித மைக்கிள் பங்கு மக்கள் காப்பாற்றப்பட்டதைக் கொண்டாடும்வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி, மூன்று நாள்கள், நன்றி திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாண்டு, இந்த நன்றி விழாக்களில், மக்களின் பங்கேற்பு அதிகமின்றி நடத்தப்பட்ட திருப்பலிகளில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற சிறப்பு மன்றாட்டுக்கள் எழுப்பப்பட்டன என்று CNA செய்தி கூறுகிறது. (CNA)
No comments:
Post a Comment