ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
முன்னொரு காலத்தில் தொழுநோயாளரை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்ததுபோல், தற்போது, கொரோனா தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டோரையும் ஒதுக்கிவைக்கும் ஆபத்து வளர்ந்துவருவதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் துணை ஆயரான Broderick Pabillo அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமி உள்ளவர் என்றும், பின்னர் அக்கிருமியின் தாக்கம் அற்றவர் என்றும் கூறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள், இந்த நோயுற்றோரை எவ்விதம் கண்ணோக்குகின்றனர் என்பதைக்குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஆசியா பசிபிக் பகுதியில், தொற்றுக்கிருமியின் தாக்கம் கொண்டோரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டில், இந்தக் கிருமியினால் துன்புறுவோர், முற்காலத்தில் தொழுநோயால் துன்புற்றோரைப் போல் நடத்தப்படுகின்றனர் என்று ஆயர் Pabillo அவர்கள் கூறினார்.
இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கம் குறித்து அனைத்து மருத்துவ பாதுகாப்பு வழிகளையும் பின்பற்றவேண்டிய அதே வேளையில், இந்த நோயுற்றோரை தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி விலக்கிவைப்பது தவறு என்பதையும், ஆயர் Pabillo அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நண்பகலில் பத்துமணி செபம்
பிலிப்பீன்ஸ் நாட்டில் நிலவும் கவலை தரும் தொற்றுக்கிருமி தாக்கத்தை ஒழிக்க, ஆகஸ்ட் 15 கடந்த சனிக்கிழமை முதல், செப்டம்பர் 15, துயருறும் அன்னை மரியா திருநாள் முடிய மக்கள் ஒவ்வொரு நாளும், நண்பகலில் பத்துமுறை 'அருள்மிகப் பெற்றவரே' என்ற செபத்தை, அன்னை மரியாவை நோக்கி எழுப்புமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன், பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில்வோர், மற்றும், பணியாற்றுவோர், கோவிட் 19 கொள்ளைநோயைக் குறித்த தெளிவான கருத்துக்களை மக்கள் நடுவே பரப்ப முயற்சிகள் எடுக்குமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)
No comments:
Post a Comment