Tuesday, 25 August 2020

மொசாம்பிக் ஆயருக்கு ஆறுதல் தொலைப்பேசி அழைப்பு

 ஆயர் Luis Fernando Lisboa


தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் Michael Czerny அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தினார் – மொசாம்பிக் ஆயர் Fernando Lisboa

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக் நாட்டில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Cabo Delgado மாநிலத்தில் மேய்ப்புப்பணியாற்றும் Pemba மறைமாவட்ட ஆயர் Luiz Fernando Lisboa அவர்களை, எதிர்பாராத நேரத்தில், தொலைப்பேசியில் அழைத்து, தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து வத்திக்கான் செய்தித் துறையிடம் பகிர்ந்துகொண்ட ஆயர் Fernando Lisboa அவர்கள், ஆகஸ்ட் 18, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 11.29 மணிக்கு, திருத்தந்தை, தன்னை தொலைப்பேசியில் அழைத்து, Cabo Delgado வடபகுதி  மாநிலத்தில், மனிதாபிமான சூழல், மோசமடைந்து வருவது குறித்து தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார் என்று கூறினார்.

திருத்தந்தையின் தொலைப்பேசி அழைப்பு, தனக்கு மிகுந்த ஆறுதலையும், உறுதியையும் கொடுத்தது எனவும், உதவி தேவைப்பட்டால், தயங்காமல் தன்னிடம் கேட்குமாறு திருத்தந்தை கூறியதாகவும், ஆயர் Luis Fernando Lisboa அவர்கள் கூறினார்.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, ஊர்பி எத் ஓர்பி செய்தியிலும், Cabo Delgado மாநிலத்தின் நிலைமையைக் குறிப்பிட்டு, அப்பகுதிக்காகத் திருத்தந்தை செபிக்க அழைப்பு விடுத்ததற்கு, தான் நன்றி கூறியதாக, ஆயர் Fernando Lisboa அவர்கள் தெரிவித்தார்.

Mocimboa da Praia துறைமுக நகரில் ஜிகாதிகள்

ஐ.எஸ். இஸ்லாம் அரசோடு தொடர்புடைய ஜிகாதிகள், Mocimboa da Praia துறைமுக நகரைக் கைப்பற்றியது குறித்தும், கடந்த வாரத்தில், அந்நகரை ஜிகாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, மொசாம்பிக் அரசுப் படைகள் அந்நகரிலிருந்து வெளியேறியுள்ளது குறித்தும் திருத்தந்தையிடம் தான் பகிரந்துகொண்டதாக, ஆயர் Fernando Lisboa அவர்கள் கூறினார்.

ஜிகாதிகள், Mocimboa da Praia நகரைக் கைப்பற்றியதிலிருந்து, காணாமல் போயுள்ள இரு அருள்சகோதரிகள் பற்றி எவ்விதத் தகவலும், இதுவரை கிடைக்கவில்லை எனவும்  ஆயர் Fernando Lisboa அவர்கள், திருத்தந்தையிடம், தொலைப்பேசியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் மொசாம்பிக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, Cabo Delgado மாநிலத்தை அடிக்கடி நினைத்தேன் என திருத்தந்தை கூறியதாகவும், தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் Michael Czerny அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், ஆயர் Fernando Lisboa அவர்கள் கூறினார்.

Cabo Delgado மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில், கணிசமான அளவு, இயற்கை எரிவாயு இருப்பதாக, 2010ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த வாயுவை எடுப்பதற்காக, ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஆயினும், தற்போது அப்பகுதியில் வளர்ந்துவரும் கடுமையான தாக்குதல்கள், இந்த முதலீடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த எரிவாயு பகுதி ஆப்ரிக்காவிலேயே மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருக்கும் இடம் என்று கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...