ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இன்றைய பொருளாதாரத்திற்கு பயனற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படும் வறியோர், வேண்டாத பொருள்களாக தூக்கியெறியப்படுகின்றனர் என்று, இந்தியாவின் வசாயி உயர் மறைமாவட்டப் பேராயர், பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், webinar என்றழைக்கப்படும் வலைத்தள கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
AICU என்றழைக்கப்படும் அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், வலைத்தளம் வழியே, அண்மையில் நடத்திய ஒரு கருத்தரங்கில், இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் மச்சாடோ அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
உலகமயமாக்கலின் தாக்கத்தால், உலகெங்கும் வறியோர் துன்புறுகின்றனர் என்றும், இந்தியாவில், வறியோரின் நிலை, கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், மிகவும் சீர்குலைந்துள்ளது என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கவலை தெரிவித்தார்.
கோவிட் 19 கொள்ளைநோயினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளைப் பயன்படுத்தி, இந்திய நடுவண் அரசு, சுற்றுச்சூழலுக்கும், கல்விக்கும், பாதிப்புக்களை உருவாக்கும்வண்ணம் வெளியிட்டுள்ள சட்டங்களைக் குறித்து, அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், இக்கருத்தரங்கில் விவாதங்களை மேற்கொண்டது என்று UCA செய்தி கூறுகிறது.
தற்போதையக் கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு, செல்வம் மிகுந்த நாடுகளுக்கு, வறிய நாடுகள் அளிக்கவேண்டிய கடன்களை இரத்து செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம், இக்கருத்தரங்கில் ஒரே மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1919ம் ஆண்டு, அப்போதைய மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சென்னை மாநகரில் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், இந்திய ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுநிலையினர் கழகம் என்பதும், தற்போது இக்கழகத்தில், 1 கோடியே 60 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (UCAN)
No comments:
Post a Comment