கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படுவோர் குறித்தும், கொரோனா தொற்று நோயால் துன்புறுவோர் குறித்தும், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதி மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள், ஆகஸ்ட் 22, கடந்த சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டதையொட்டி, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், இவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா கொள்ளைநோய்க்கு பலியானவர்கள், மற்றும், வளமான வாழ்வு நோக்கிய பயணத்தில் உயிரிழந்த குடியேற்றத்தாரர் குறித்தும் அக்கறையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இன்றைய உலகில் எண்ணற்றோர் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக, வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கிறது என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காக செபிப்பது, மற்றும், அவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதன் வழியாக, நம் ஆதரவை வெளியிடுவோம் என கேட்டுக்கொண்டார்.
வளமான வாழ்வை நோக்கிய பயணத்தின்போது, தங்கள் உயிரை இழந்துள்ள ஏழை குடியேற்றதாரர் குறித்து நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கணக்கு கேட்பார் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பல்வேறு நாடுகளில் இருந்து வளமான வாழ்வைத்தேடி செல்லும் வழியில் மெக்சிகோவின் சான் பெர்னாண்டோ என்ற இடத்தில் 72 குடியேற்றதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 24ம் தேதி கொலைசெய்யப்பட்டதையொட்டி, குடியேற்றதாரர் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழ்மையால் வாடும் மக்களுக்கென நம் சமூகங்களின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதி, மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்தும் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதுடன், பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள், விரைவில் நிறைவுறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
No comments:
Post a Comment