Tuesday, 25 August 2020

குரலற்றோரின் குரலாக ஒலிப்போம்

 சம உரிமை கேட்டு போராடும் தென் ஆப்ரிக்க பெண்கள்

நிறவெறி அரசின் கீழ் பல்வேறு அடிமைத்தனங்களை சந்தித்த தென் ஆப்ரிக்க பெண்கள், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தை, பெண்கள் மாதமாக சிறப்பித்து வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குரலற்றோரின் குரலாக ஒலிப்போம் என்ற நோக்கத்துடன், தென் ஆப்ரிக்க கத்தோலிக்க பெண்கள் அமைப்பு, இத்திங்கள், ஆகஸ்ட் 24ம் தேதியன்று மாலை, வலைத்தொடர்புகள் வழியாக கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த கோவிட்-19 காலத்தில் தனிமைப்பட்டிருக்கும், மற்றும், துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களின் குரலாக ஒலிக்க விரும்புவதாக இந்த கத்தோலிக்க பெண்கள் அமைப்பு தன் செய்தியில் கூறியுள்ளது.

தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்களின் வலைத்தளத்தில் தங்கள் செய்தியை வெளியிட்டுள்ள இந்த பெண்கள் அமைப்பு, தென் ஆப்ரிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலர், அருள்சகோதரி Hermenegild Makoro அவர்களின் வழிநடத்தலின்கீழ் இந்த ஒருமைப்பாட்டு நிகழ்வு இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, உயிரிழந்த George Floyd அவர்கள் கடைசியாக உச்சரித்த, 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என்ற  தலைப்புடன் நடத்தப்பட்ட இந்த வலைத்தொடர்பு வழி செபக்கூட்டம், தென் ஆப்ரிக்க கத்தோலிக்க பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறவெறி அரசின் கீழ் பல்வேறு அடிமைத்தனங்களை சந்தித்த தென் ஆப்ரிக்க பெண்கள் 20,000த்திற்கும் மேற்பட்டோர், 1956ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி, ஊர்வலம் ஒன்றை நடத்தியதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தை, பெண்கள் மாதமாக சிறப்பித்து வருகின்றனர், தென் ஆப்ரிக்க மக்கள்.

No comments:

Post a Comment