மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்ற அனைத்துவிதமான கொடூரங்களுக்கும், மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று, உலகினர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
மதம் அல்லது மதநம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகள் வழியாக, இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.
“எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம், கடவுளுக்கு கிடையாது, அதேநேரம், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவர் விரும்பவில்லை, எனவே, வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்றவற்றைத் தூண்டிவிடுவதற்கு, மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு, அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், மனித உடன்பிறந்தநிலை (#HumanFraternity) என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியிருந்தன.
திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நீ நன்றாக நடந்துகொள்கிறாய் என்பதற்காக, கடவுள் உன்னை அன்புகூர்வதில்லை, அவர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எளிமையாக உன்னை அன்புகூர்கிறார், அவரது அன்பு எல்லையற்றது, அது, உன்னைச் சார்ந்து இருக்கவில்லை” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், மதக் குழுமங்கள், பொதுவான பாதுகாப்பிற்கும், தேசிய தனித்துவத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்று பலநேரங்களில் சித்தரிக்கப்படும்வேளை, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், அக்குழுமங்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment