மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில், வயதுமுதிர்ந்த விவசாயி ஒருவர், மிக உயர்ரக சோளத்தை உற்பத்தி
செய்து வந்தார். ஒவ்வோர் ஆண்டும், அந்நாட்டு அரசு நடத்தும் கண்காட்சியில்
அவர் உற்பத்தி செய்த சோளமே, தங்கப் பதக்கத்தைப் பெற்று வந்தது. அந்த
விவசாயியின் இந்த சாதனையைக் கேள்விப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், அவரை
பேட்டி காண விரும்பினார். ஒரு நாள், அந்த விவசாயி சோளக்காட்டில் இருந்த
நேரத்தில், பத்திரிகையாளர் அவரை சந்தித்து, அவரின் வெற்றியின் இரகசியம்
என்னவென்று கேட்டார். அந்த விவசாயியும், தனது வேளாண் முறை பற்றி
விளக்கினார். அவர், தன்னிடம் இருக்கும் நல்ல விதைகளை, அவரது நிலத்திற்கு
நாலா பக்கங்களிலும் பயிர்செய்யும் மற்ற விவசாயிகளிடம் கொடுத்து, அவற்றை
விதைத்துப் பயிர்செய்யத் தூண்டுவதை அறிந்தார் பத்திரிகையாளர். எனவே
அவரிடம், உங்களோடு பல விவசாயிகள் போட்டிப் போட்டுக்கொண்டு
பயிர்செய்யும்போது, உங்களால் எப்படி சிறந்த விதைகளை, அயலவர்களுக்கு கொடுக்க
முடிந்தது என்று, பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அவர், ஏன் முடியாது
சார், உங்களுக்குத் தெரியுமா, காற்று, நல்ல முற்றிய சோளத்திலிருந்து
மகரந்தங்களை அடித்துச்சென்று, அது செல்லும் திசைகளில் தூவிச்செல்லும். எனது
நிலத்திற்கு அருகிலிருப்பவர்கள், தரமற்ற சோளத்தைப் பயிரிட்டால், அவை
முற்றியபின், காற்றினால் நடைபெறும் மகரந்தசேர்க்கையில், எனது நிலத்தின்
சோளமும் தரம் குறைந்துவிடும். எனவே நான் உயர்ரக சோளத்தை விளைவிக்க
விரும்பினால், எனது அயலவர்களும் அதே ரக, நல்ல சோளத்தை பயிர்செய்யவேண்டும்
என்று சொல்லி முடித்தார். அந்த வயதுமுதிர்ந்த விவசாயியை வாழ்த்தி
விடைபெற்ற, அந்த பத்திரிகையாளர், அந்த விவசாயி, மனித வாழ்வில் நிகழும்
தொடர்புகள் பற்றி எவ்வளவு அறிந்துவைத்துள்ளார் என்று ஆச்சரியப்பட்டார்.
அதோடு அந்தப் பகிர்விலிருந்து கிடைத்த நல்சிந்தனைகளையும், அவர் இவ்வாறு
பதிவுசெய்துள்ளார். அமைதியில் வாழ விரும்புவோர், தன்னைச்
சுற்றியுள்ளவர்களும் அமைதியில் வாழ உதவவேண்டும். அன்புகூரப்பட
விரும்புவோர், முதலில் மற்றவரை அன்புகூரக் கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்வில்
வளமாக வாழ விரும்புவோர், மற்றவரும் வளமாக வாழ உதவவேண்டும். மகிழ்வாய்
இருக்க விரும்புவோர், மற்றவரின் நலனில் அக்கறைகொண்டு, அவர்களும் மகிழ்வாய்
வாழ அனுமதிக்கவேண்டும். ஆம். மனித வாழ்வின் மதிப்பு, அந்த வாழ்வு
மற்றவரில் எவ்வளவு தூரம் நல்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைப் பொருத்தே
அமைந்துள்ளது. பிறருக்கு உதவுவது, நமக்கு நாமே உதவுவதாகும்
No comments:
Post a Comment