Thursday, 20 August 2020

அறத்தின் மேன்மை

 மரணப்படுக்கையில் இருக்கும் வயதுமுதிர்ந்தவருக்கு ஆறுதல்

பொய் சொல்லக்கூடாது என்று, அந்த திருடர் கடைப்பிடித்த ஒரேயோர் அறம், அவர் வாழ்வில் பல அறங்களைச் சேர்த்து, அவருக்கு வெற்றியைக் குவித்துள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த ஊரில், இளைஞர் ஒருவர், திருட்டையே தொழிலாகச் செய்துவந்தார். ஒருநாள், மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய், அவரைக் கூப்பிட்டு, மகனே, நீ பெரிது பெரிதாய்த் திருடு, அதற்கு உன்னை வாழ்த்துகிறேன், ஆனால் ஒரேயொரு வாக்குறுதி மட்டும் எனக்குக் கொடு, நீ உன் வாழ்நாளில் பொய்யே சொல்லக்கூடாது என்று கூறினார். அவ்வாறு நடப்பதாக மகன் உறுதியளித்ததும் அந்த தாயின் உயிரும் பிரிந்தது. அதற்குப்பின் ஒருநாள் அந்த இளைஞர் அந்த ஊரின் அரண்மனைக்குமுன் நின்றுகொண்டு எப்படி திருடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குதிரையிலிருந்து வந்த மனிதர் ஒருவர், அவரிடம், ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டார். நான் ஒரு திருடன், இன்று அரண்மனையில் திருடப்போகிறேன் என்றார். அப்போது அந்த மனிதர், நானும் திருடன்தான், யாராவது பார்க்கிறார்களா? என்று உனக்குச் சொல்வதற்கு நான் வெளியில் காவலுக்கு நிற்கிறேன். நீ உள்ளே சென்று திருடு. ஆனால் நீ திருடியதில் ஆளுக்குப் பாதி எடுத்துக்கொள்வோம் என்றார். அந்த திருடரும் சரி என்று சொல்லி அரண்மனைக்குள் சென்று ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் மூன்று வைரக்கற்கள் இருந்தன. அவற்றில் இரண்டை எடுத்துவந்து, ஒன்றை அந்த மனிதரிடம் கொடுத்தார். அடுத்த நாள் அரண்மனைக்கு வந்த அமைச்சர், வைரப் பெட்டி திறந்திருப்பதைப் பார்த்தார். அதில் எஞ்சியிருந்த ஒரு வைரக்கல்லையும் அவர் எடுத்துக்கொண்டு, அந்த திருட்டை மற்ற இரண்டையும் திருடியவர் மீதே சுமத்திவிடலாம் என்று நினைத்தார். பின் அரசரிடம் வந்து வைரக்கற்கள் திருடுபோய்விட்டது பற்றிச் சொன்னார் அமைச்சர். அரசர் ஊர் மக்களைக் கூப்பிட்டு ஒவ்வொருவராக விசாரித்தார். அவர்களில் ஒருவராக அந்த திருடரும் நின்றார். அவர் முறை வந்தபோது, அரசரிடம் நான்தான் திருடினேன் என்றார். சரி, நீ எத்தனை கற்களை எடுத்தாய் என்று அரசர் கேட்டார். அதற்கு அவர்,  இரண்டு கற்கள் என்று பதில் சொன்னார். ஆனால் அமைச்சரோ இல்லை, இவன் மூன்று கற்களையும் திருடிவிட்டான் என்றார். ஆனால் திருடரோ இல்லை, நான், 2 வைரக் கற்களைத்தான் திருடினேன் என திரும்பத் திரும்பச் சொன்னார். அமைச்சருக்கும் திருடருக்கும் இப்படியே வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது அரசர் குறுக்கிட்டு, ஆம், அவன் சொல்வது உண்மைதான். நேற்று இரவு நான் மாறுவேடத்தில் குதிரையில் வந்தபோது இவனைப் பார்த்தேன். நான் திருடன் என்று, இவன் சொன்னதுமே, ஆள் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறானே என்று நினைத்து, அவனது திருட்டுக்கு நானும் உதவினேன். இதோ அவன் திருடியதில் இன்னொரு வைரம் என்று, அதை தனது சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துக்காட்டினார் அரசர். பின்னர் அமைச்சர் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். அதேநேரம், அரசர், அந்த அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, அந்த திருடரை அந்தப் பதவியில் அமர்த்தினார். பொய் சொல்லக்கூடாது என்று, அந்த திருடர் கடைப்பிடித்த ஒரேயோர் அறம், அவர் வாழ்வில் பல அறங்களைச் சேர்த்து, அவருக்கு வெற்றியைக் குவித்துள்ளது. அதேபோல் நாமும், வாழ்வில் ஒரேயோர் அறத்தைக் கடைப்பிடித்தால், அந்த அறம்சார்ந்த நன்மை, பன்மடங்கு நன்மைகளைக் கொணர்ந்து, நம் வாழ்வை உயர்வடையச் செய்யும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...