Tuesday 25 August 2020

போலியோ தடுப்பில், பாகிஸ்தான் நலவாழ்வு பணியாளர்

 பாகிஸ்தான் நலப்பணியாளர்


உலக அளவில், கொரோனா கொள்ளைநோயால், 2 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், ஏறத்தாழ 8 இலட்சம் பேர் இறந்துள்ளனர் - WHO

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து குணமடைந்த யூனிசெப் பணியாளர் ஒருவர், அந்நோயின் அச்சத்தை அகற்றி, அந்நாட்டில் போலியோ நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வருகிறார் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.,  

கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் அதிகமாகப் பரவிவரும் இந்த வேளையில், யூனிசெப் அமைப்பு, போலியோ தடுப்பு ஊசிகள் போட மீண்டும் துவங்கியுள்ளது என்று, அந்த அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா கொள்ளைநோயால் தாக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து, துணிச்சலுடன் மீண்டும் பணியைத் துவக்கியுள்ள முதல் நபராகிய Husna Gul அவர்கள், பாகிஸ்தானில்  போலியோவால் இடம்பெறும் இறப்புகள் மற்றும், ஏனைய பாதிப்புக்களைத் தடுப்பதற்காக, மீண்டும் பணியை ஆரம்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கோவிட்-19, விரைவில் கட்டுப்பாட்டுக்குள்

இதற்கிடையே, கோவிட்-19 கொள்ளைநோய் குறித்து, ஜெனீவாவில், ஆகஸ்ட் 21, இவ்வெள்ளியன்று உரையாற்றிய, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், இந்த கொள்ளைநோய், இரண்டு ஆண்டுகளுக்குள் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று, தான் நம்புவதாக அறிவித்தார்.

1918ம் ஆண்டு பிப்ரவரியில் பரவிய இஸ்பானிய காய்ச்சல் என்ற கொள்ளைநோய், 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடித்தது என்று குறிப்பிட்ட Ghebreyesus அவர்கள், தற்போதைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தால், கொரோனா கொள்ளைநோயை விரைவில் குணமாக்க இயலும் என்று கூறினார். 

கொரோனா கொள்ளைநோய், புதிதாக பல நாடுகளில் பரவி வருவதால், இது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், Ghebreyesus அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில், கொரோனா கொள்ளைநோயால், 2 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், ஏறத்தாழ 8 இலட்சம் பேர் இறந்துள்ளனர். அதேநேரம், மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று, WHO நிறுவனத் தலைவர் கூறினார்.

உலகில், 1918ம் ஆண்டில் பரவிய இஸ்பானிய காய்ச்சலால், குறைந்தது ஐந்து கோடிப் பேர் உயிரிழந்தனர். (UN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...