Tuesday, 25 August 2020

வெள்ளையரை விரட்டியடித்த பழங்குடியின வீராங்கனை

 இந்தியாவின் விடுதலைக்கு உழைத்த தியாகிகள்

சாலிஹான், ஆயுதமேந்தியிருந்த ஆங்கிலேய அதிகாரியை, ஆத்திரம் பொங்க, சபார், லத்தியால் தாக்கி, தெருக்கோடி வரை துரத்திக்கொண்டே சென்று விரட்டியடித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திமதி தேய் சபார் அவர்கள், ஆங்கிலேயர், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த காலக்கட்டத்தில், ஒடிசா மாநிலத்தின் சாலிஹா கிராமத்தில், ஆங்கிலேய அதிகாரிகளை லத்திகளோடு எதிர்கொண்டவர். அது 1930ம் ஆண்டு. சபார் அவர்களுக்கு பதினாறு வயது இருக்கும். இவர், மற்ற பழங்குடி இனப் பெண்களுடன் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது, தனது சாலிஹா கிராமத்தில் இருந்து வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த இளைஞன் ஒருவன், சபாரிடம், “அவர்கள் நம் கிராமத்தை தாக்குகிறார்கள். உன் அப்பாவை அடித்துவிட்டார்கள். நம் வீடுகளைக் கொளுத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று மூச்சிரைக்கச் சொன்னான். அவன், “அவர்கள்” என்று, ஆங்கிலேய காவல்துறை ஆள்களைத்தான் குறிப்பிட்டான். உடனே சபார், நாற்பது இளம்பெண்களோடு, கிராமத்தை நோக்கி விரைந்தார். நிலத்தில் இரத்தம் வடியக் கிடந்த தனது தந்தையைக் கண்டார். ஆயுதமேந்தியிருந்த அந்த அதிகாரியை, ஆத்திரம் பொங்க, சபார், லத்தியால் தாக்கி, தெருக்கோடி வரை துரத்திக்கொண்டே சென்று அவரை விரட்டியடித்தார். வயற்காட்டுக்கு வேலைக்குப் போகும்பொழுது காட்டு விலங்குகள் தொல்லை தரக்கூடும் என்பதால், அப்பெண்கள் லத்தியை கொண்டு போவது வழக்கம். உடனே, சபாருடன் சென்ற 40 பெண்களும், தங்களின் லத்தியைக்கொண்டு மீதமிருந்த படையினரை நையப்புடைத்து விரட்டியடித்தனர். 2001ம் ஆண்டில், ஏறத்தாழ தொண்ணூறு வயதை எட்டியிருந்த சபார், தனது முதிர்ந்த வயதிலும், தனது வீரக்கதையை, ஊடகங்களிடம், இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். சபாரின் தந்தையான கார்த்திக் சபார் அவர்களும், ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டங்களை அப்பகுதியில் தொடர்ந்து நடத்தினார். ஒடிசாவில், சாலிஹா கிராமம் இருக்கின்ற நுபதா மாவட்டம், இந்திய விடுதலைக் கிளர்ச்சிக்கு பெயர் பெற்றது. திமதி தேய் சபார் அவர்கள், ஒடிசாவின், நுபதா மாவட்டத்தில், சாலிஹா கிராமத்தில் பிறந்தவர். அந்த கிராமத்தில் இவர், ‘சாலிஹான்’ என்று அறியப்படுகிறார். சாலிஹாவின் கிராமப் பகுதி, ஆங்கிலேயர்களோடு கூட்டுசேர்ந்துகொண்ட பண்ணையார்களால் இப்பொழுது ஆதிக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சாலிஹானும், மற்றவரும் போரிட்டு பெற்றுத்தந்த விடுதலையால், எளியவர்களைவிட இவர்களே அதிகம் பயன்பெற்று உள்ளார்கள் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.  சாலிஹான் அவர்கள், 2002ம் ஆண்டில் இறைவனடி எய்தினார். திருமதி திமதி சபார் சாலிஹான் போன்ற எளிய வீராங்கனைகள் செய்தித்தாளின் மூன்றாம் பக்கச் செய்தியாகக்கூட இடம்பெறமாட்டார்கள் என்பது கசப்பான உண்மை.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...