மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இலங்கையில் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, தமிழரான அருள்பணி ஆன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் (Anton Ranjith Pillainayagam) அவர்கள், அந்நாட்டின் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே நெருங்கிய உறவு வளர ஊக்குவிப்பார் என்று, கத்தோலிக்கர் எதிர்பார்த்துள்ளனர்.
53 வயது நிரம்பிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், ஆகஸ்ட் 29, வருகிற சனிக்கிழமையன்று, Kotahena புனித லூசியா பேராலயத்தில், ஆயராகத் திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.
சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ் தேவ தர்ம நிகேதானாயா இறையியல் நிறுவனத்தில், தமிழ்ப் பிரிவுக்குத் தலைவராக, 2006ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
அருள்பணி இரஞ்சித் அவர்கள், கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு, துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, யூக்கா செய்தியிடம் கூறிய, தேசிய சமூகத்தொடர்பு அமைப்பின் இயக்குனரான அருள்பணி Lal Pushpadewa Fernando அவர்கள், புதிய ஆயர், தனது இளமைத்துடிப்பு மற்றும், தொலைநோக்கு கருத்துக்களால், கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு, ஒரு சொத்தாக இருப்பார் என்று கூறினார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த, தமிழ் கத்தோலிக்க ஆசிரியர் ஆர்.ஷண்முகம் அவர்கள், இலங்கையில் பல ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே முறிந்திருந்த உடன்பிறந்த உணர்வு, மீள்கட்டமைக்கப்பட, அருள்பணி இரஞ்சித் அவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இலங்கையில் ஏறத்தாழ 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், நாட்டின் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், மக்களும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரில், குறைந்தது நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்று ஐ.நா. கூறும்வேளை, இவ்வெண்ணிக்கை, ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்று, சில தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, இலங்கையில் அரசுத்தலைவரின் பதவிக்காலத்தை வரையறுக்கும்
சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கு, அந்நாட்டில் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை, வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவை
உருவாக்கியுள்ளது என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.
No comments:
Post a Comment