Tuesday, 25 August 2020

புத்திசாலியாக செயல்படு

 திபெத்தின் புத்த துறவி ஒருவர்

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

தொடர்ந்து போர்புரிந்து, தொலைதூர நாட்டில் இராணுவப்பாசறை ஒன்றில் தங்கியிருந்த மன்னரின் காதில் ஒரு பூச்சி நுழைந்துவிட்டது. காதிலிருந்த பூச்சியை எடுக்க, மன்னரைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அரச வைத்தியரும் எவ்வளவோ பாடுபட்டார். எதற்கும் பலன் இல்லை. எங்கிருந்தெல்லாமோ மருத்துவர்கள் வந்தார்கள், யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னரின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால், அவரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. உணவு சாப்பிடுவது குறைந்தது. மன்னர் தன் பொலிவு இழந்தார். எந்நேரமும் படுக்கையிலேயே இருந்தார்.

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடைசூழ நாட்டிற்கு வந்திருப்பதாகச் செய்திகள் வந்தன. பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்கச் சென்று, தன் கணவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினார். அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி, மன்னரின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.

“இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே! நம் ஊர் மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. .இங்கிருந்து ஆயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும். இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையைக் கொண்டு வர செய்கிறேன், அதன்பின் உங்கள் பிரச்சினை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்”, என்றார். மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.

அது ‘ராஜ மூலிகை’ என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லிவிட்டார். மறுநாள் காலை விடிவதற்கு முன்னால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னரின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.

அடுத்த சில நொடிகளில், செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது. மன்னரிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி. துறவியின் கால்களில் விழுந்து வணங்கினார் மன்னர். சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி. மன்னர் இப்போது நிம்மதியாகத் தூங்கினார், நன்றாக உண்டார், பழைய பொலிவு திரும்பி விட்டது. துறவி விடை பெற்றுக்கொண்டார். அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும், துறவியின் சீடர்களில் ஒருவர் கேட்டார், ”குருதேவா…!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…!!!” என்று. ‘துறவி புன்னகை பூத்தார்!

“பூச்சி இத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?  மன்னரின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம். போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை, வெளியே வந்திருக்கும். அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது. .அது, மன்னனின் மனதில் குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதித்துவிட்டது. பிரச்சினை தீவிரமானது என்று மன்னர் நினைத்துக் கொண்டிருந்தார். அதனால்தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன். .தொலைதூரத்திலிருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன். காலை விடிவதற்கு முன், இருட்டு நேரத்தில், மூலிகைச் சாற்றை மன்னரின் காதில் விட்டு, ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன், மன்னர் நம்பிவிட்டார், அவர் நோயும் தீர்ந்தது.  இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன” என்று கூறிய குருவை, சீடர்கள் வியப்புத் தாளாமல் பார்த்தார்கள்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...