Thursday, 20 August 2020

“வளருவதற்காக பகிர்தல்”: புலம்பெயர்ந்தோருக்காக ஒன்றிணைந்து...

 1597248326554.jpg

வெனெசுவேலா நாட்டில் புதியதொரு குடும்பத்தின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்துவரும் புலம்பெயர்ந்த, எரிக் அவர்களின் அனுபவம், பகிர்தலின் பலனை எடுத்துரைக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியைப் பரப்பும் நோக்கத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, நான்காவது முறையாக காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, ஆகஸ்ட் 13, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், வெனெசுவேலா நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்த Eric Estrada Buenaño என்பவர், தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதியதொரு குடும்பத்தில் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

எரிக்கின் பகிர்வு

நாட்டின் கடைகோடியில் அமைந்துள்ள தனது சொந்த மாநிலத்தில், கெரில்லாக்கள் தொந்தரவு, சட்ட, ஒழுங்கின்மை, திட்டமிட்ட குற்றக்கும்பல், மனிதர் கடத்தப்படல், சுத்தமான குடிநீரின்மை, பாதுகாப்பின்மை, வீட்டில் எரிவாயு வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக, தான் புலம்பெயர்ந்ததாக, எரிக் அவர்கள், அந்த காணொளியில் விவரித்துள்ளார். 

எனக்குப் புகலிடம் அளித்துள்ள குடும்பம், தங்கும் இடம், உணவு, போன்ற உதவிகளை வழங்கியதோடு, எனக்கு ஒரு வேலையையும் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது என்றும், அந்தக் குடும்பம், எனக்கு இரண்டாவது குடும்பம் போன்று, பெரிய அளவில் உதவிசெய்துள்ளது என்றும், எரிக் அவர்கள் கூறியுள்ளார்.

பகிர்வு, மனிதப் பண்பில் வளர

நான் நம்பிக்கையில் வளரவும், எனது இரண்டாவது குடும்பம் உதவி செய்துள்ளது என்று விவரித்துள்ள எரிக் அவர்கள், நம் உதவியை நாடித்தேடி பலர் இருக்கின்றனர், பகிர்வு, நம்மை மேலும் மனிதப்பண்பில் வளரச்செய்கின்றது, கடவுளில் கொண்டிருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது, மற்றும், கடவுளின் குழந்தைகள் என உணரச்செய்கின்றது என்றும் கூறியுள்ளார்.

பகிர்வு என்பது, வெறும் பொருள்களைப் பகிர்வதோடு மட்டுமல்லாமல், வாழ்வு அனுபவம், மகிழ்வு, அன்பு, ஊக்கமூட்டும் வார்த்தை போன்றவற்றை பகிர்வதாகும் என்றும், வெனெசுவேலா நாட்டு புலம்பெயர்ந்த Eric Estrada Buenaño அவர்கள் கூறியுள்ளார்.

முதல் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்குமுன், 1914ம் ஆண்டில் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோருக்காக இறைவேண்டல் செய்வதற்கு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அப்போதுதான் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் முதல் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நாள், திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுமாறு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 2005ம் ஆண்டில் அறிவித்தார்.

பல்வேறு ஆயர்கள் பேரவைகளின் விண்ணப்பத்தின்பேரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக நாள், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுமாறு, 2018ம் ஆண்டில் அறிவித்தார்

No comments:

Post a Comment