ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
சரியாக 42 ஆண்டுகளுக்கு முன், 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறை, இத்திருத்தந்தையின் வாழ்வில் விளங்கிய சில பண்புகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.
புரட்சிகரமான புதுப்பெயர்
திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் மறைவையடுத்து கூடிய கர்தினால்கள் அவையில், கர்தினால் அல்பீனோ லூசியானி அவர்கள் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டதும், தனக்குமுன் திருஅவையின் தலைவர்களாக இருந்த 23ம் யோவான், 6ம் பவுல் என்ற இருவரின் பெயர்களையும் இணைத்து, தன் தலைமைப்பணிக்குரிய பெயரை, முதலாம் யோவான் பவுல் என்று அறிவித்தது, பலருக்கும் வியப்பைத் தந்தது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் ஆயர் லூசியானி
லூசியானி அவர்கள் அருள்பணியாளராகவும், பின்னர் ஆயராகவும், பணியாற்றிய வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்கு தேவையான தயாரிப்புக்களைக் குறித்து மக்களுக்கு பல வழிகளில் விளக்கிவந்தார்.
இந்தப் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட ஆயர் லூசியானி அவர்கள், ஒவ்வோர் அமர்விலும் தவறாமல் கலந்துகொண்டதோடு, அங்கு நடைபெற்ற கருத்துப்பரிமாற்றங்களை தவறாமல் எழுதிவந்தார் என்று வத்திக்கான் செய்தித்துறை நினைவுகூர்ந்துள்ளது.
இந்தப் பொதுச்சங்கம் நிறைவுற்றபின், வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாகப் பொறுப்பேற்ற வேளையில், இச்சங்கத்தைப் பற்றி கூறப்பட்டு வந்த பல்வேறு முரணான கருத்துக்களினால் மக்கள் குழப்பம் அடையாதிருக்கும் வகையில், கர்தினால் லூசியானி அவர்கள் இச்சங்கத்தைப் பற்றிய தெளிவுகளை வழங்கிவந்தார்.
ஏனைய மதத்தினர் மீது மதிப்பு
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வழங்கிய உலகளாவிய திருஅவை என்ற கருத்தை, கர்தினால் லூசியானி அவர்கள் தன் மறைமாவட்டத்தில் வலியுறுத்தி வந்தார்.
திருவழிபாட்டில் தேவையான மாற்றங்களைக் கொணர்வதிலும், ஏனைய மதத்தினர் மீது மதிப்பு காட்டுவதிலும், உரையாடலை வளர்ப்பதிலும், கர்தினால் லூசியானி அவர்கள் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.
ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடை செய்யவோ, நிறுத்தவோ முயற்சி செய்யாமல், நம் கிறிஸ்தவ மதத்தின் அழகை நம் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க நம் மறைக்கல்வியை இன்னும் சிறப்பான முறையில் வழங்கவேண்டும் என்பது, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் விருப்பமாக இருந்தது.
No comments:
Post a Comment