கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato Si' என்ற பெயரில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திருமடலை வெளியிட்டதன் ஐந்தாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாகவும், 50வது சுதந்திர நாள், தேசத்தந்தையின் 100வது பிறந்த நாள் ஆகியவற்றையொட்டியும், நான்கு இலட்சம் மரக்கன்றுகளை பங்களாதேஷ் முழுவதும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது தலத்திருஅவை
2015ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட Laudato Si' திருமடலின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் விடுதலையடைந்ததன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்கள், வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளதையொட்டியும், பங்களாதேஷை உருவாக்கிய தேசத்தந்தை முஜிபுர் ரஹ்மான் அவர்களின் 100வது பிறந்த நாள் இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டியும், இந்த மரங்கள் நடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தலத்திருஅவை அறிவித்துள்ளது.
கோவிட்-19 நலப்பிரச்சனைகளின் கட்டுப்பாட்டால், வெகு சில ஆயர்களும் அருள்பணியாளர்களும் மட்டுமே குழுமியிருக்க, இந்த மரம் நடும் திட்டத்தை, இம்மாதம் 14ம் தேதி டாக்காவிலுள்ள பங்களாதேஷ் ஆயர் பேரவை இல்ல வளாகத்தில் கர்தினால் பேட்ரிக் டி ரொசாரியோ அவர்கள், மரங்களை நட்டபின், அந்நாட்டின் எட்டு மறைமாவட்டங்களும், அனைத்துப் பங்குத்தளங்களும், தொடர்ந்து தங்கள் பகுதிகளில் மரங்களை நடவேண்டும் என விண்ணப்பித்தார்.
பங்களாதேஷ் நாட்டையும், இந்த மண்ணையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அன்புகூர்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பங்களாதேஷ் நாட்டில் உள்ள 4 இலட்சம் கத்தோலிக்கரும், ஆளுக்கொரு மரம் நடவேண்டும் என உரைத்த கர்தினால் டி ரொசாரியோ அவர்கள், தலத்திருஅவையின் திட்டத்தின் கீழ் நடப்படுபவை பெரும்பான்மையாக, பழ மரங்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார். (UCAN)
No comments:
Post a Comment