ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அண்மைய ஆண்டுகளில் மிகக்கடினமான நேரங்களை எதிர்கொண்ட இலங்கையை அன்னை மரியா எப்போதும் காத்துவந்துள்ளார் என்று, கண்டி ஆயர் வியான்னி பெர்னாண்டோ அவர்கள், மடு மாதா திருத்தலத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.
அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி, இலங்கையின் மடு மாதா திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்ட திருநாள் சிறப்புத் திருப்பலியின்போது, ஆயர் பெர்னாண்டோ அவர்கள் வழங்கிய மறையுரையில், உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து இலங்கை மக்களைக் காத்துவரும் அன்னை மரியாவுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மக்களிடம் நினைவுறுத்தினார்.
இலங்கை அரசு விதித்துள்ள விதிமுறைகளை மக்கள் பெருமளவில் பின்பற்றியதால், தங்கள் நாடு இந்தக் கொள்ளைநோயினால் பெருமளவு பாதிக்கப்படவில்லை என்பதை உணரும் அதே வேளை, அன்னை மரியா இந்நாட்டு மக்களை காத்து வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று, ஆயர் பெர்னாண்டோ அவர்கள் தன் மறையுரையில் நினைவுறுத்தினார்.
கடந்த 29 ஆண்டுகளாக இலங்கை பல்வேறு துயரங்களைச் சந்தித்ததையும், இந்த கடினமான ஆண்டுகளில், இலங்கையின் வட பகுதிகளில், அருள்பணியாளர்களின் உதவி இல்லையெனினும், மக்கள் தங்கள் மத நம்பிக்கையைக் காத்து வந்தததற்கு, அன்னை மரியாவின் மீது கொண்டிருந்த பக்தியே காரணம் என்றும், ஆயர் பெர்னாண்டோ அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கண்டி, மன்னார், அனுராதபுரம் மறைமாவட்டங்களின் ஆயர்கள் இணைந்து, தமிழ், மற்றும், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நிறைவேற்றிய இந்தச் சிறப்புத் திருப்பலி, தொலைக்காட்சி வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதென ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)
No comments:
Post a Comment