ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று, அனைவருக்கும், மிகக்கடினமான நேரங்களில், வியக்கத்தக்க முறையில் பணியாற்றும், வாழ்வின் உண்மையான நாயகர்களை வாழ்த்துவோம் என்று ஐ.நா.நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் வெளியிட்ட சிறப்புச் செய்தியொன்றில் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 19, இப்புதனன்று, மனிதாபிமான உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு, நெருக்கடிகளை உருவாக்கிய கோவிட் 19 கொள்ளைநோயின் காலத்தில் துணிவுடன் தங்கள் வாழ்வைப் பணயம் வைத்துள்ள மருத்துவப் பணியாளர்ளை சிறப்பான முறையில் வாழ்த்தியுள்ளார்.
இந்தக் கொள்ளைநோய் காலத்தில், உதவி தேவைப்படும் மக்களில் ஒரு சிலர், குறிப்பாக, குடிபெயர்ந்து அல்லது புலம்பெயர்ந்து முகாம்களில் வாழ்வோர், தன்னார்வப்பணியாளர்களாக மாறியிருப்பதையும், உதவி தேவைப்படும் உள்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதையும் காணமுடிகிறது என்பதை, கூட்டேரஸ் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி பற்றாக்குறை அதிகம் இருக்கும் இந்த நெருக்கடி காலத்திலும், பல மருத்துவப் பணியாளர்கள், கொள்ளைநோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட 63 நாடுகளில் பணியாற்றியதையும் கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.
தன்னலமின்றி உழைக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஒரு சில நாடுகளில் தாக்கப்பட்டிருப்பதைக் குறித்து, ஐ.நா.வின் நெருக்கடி பணிகளின் ஒருங்கிணைப்பாளர் Mark Lowcock அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
2019ம் ஆண்டு, மனிதாபிமானப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 234 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 124 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள், குறிப்பாக, சிரியா, தென் சூடான், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் நிகழ்ந்ததென்று கூறப்பட்டுள்ளது. (UN)
No comments:
Post a Comment