Tuesday, 25 August 2020

மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு பலியானவர்கள்

 அல்ஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பலியான துறவிகள்


பயங்கரவாதத்திற்குப் பலியாவோரை நினைவுகூரும் உலக நாளுக்கு, அடுத்த நாளை, அதாவது ஆகஸ்ட் 22ம் தேதியை, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாளாக, ஐ.நா. நிறுவனம், 2019ம் ஆண்டில் அறிவித்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதத்தை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் பயங்கரவாதம், உலக அளவில் அதிகரித்துவருவது குறித்து, பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதம் அல்லது ஒருவரது மதநம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ACN எனப்படும், தேவையில் இருப்போருக்கு உதவும் உலகளாவிய பிறரன்பு அமைப்பின் தலைவர், Thomas Heine-Geldern அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இந்த உலக நாளை அறிவித்து ஓராண்டு ஆகிய பின்னரும், சமயக் குழுமங்களுக்கு எதிரான வன்முறை, முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை, Heine-Geldern அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.    

உலகில் இடம்பெறும் இந்த எதார்த்தமான உண்மைக்கு முன், நாம், கண்களை மூடிக்கொண்டு இருக்கஇயலாது என்று கூறியுள்ள Heine-Geldern அவர்கள், நியாயமான சமுதாய உரிமைகள் மற்றும், அநீதியான விவகாரங்கள் ஆகியவை மீது கவனத்தைக் கொணர்வதற்காக, மதங்களின் கட்டடங்களும், அடையாளங்களும் தாக்கப்படுவது, உலக அளவில் அதிகரித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், நைஜீரியா, இந்தியா போன்ற பல நாடுகளில், மதத்தை அடிப்படையாக வைத்து இடம்பெறும், வன்முறை மற்றும், அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து தனது அமைப்பு, மிகுந்த கவலைகொண்டுள்ளது என்றும், Heine-Geldern அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாதம் 12ம் தேதி, மொசாம்பிக் நாட்டின் Mocimboa da Praia துறைமுக நகரை, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு கைப்பற்றியது பற்றிக் குறிப்பிட்டுள்ள Heine-Geldern அவர்கள், ஐ.எஸ் அரசு, ஈராக் போன்று, மற்ற நாடுகளிலும், அந்நாடுகளின் கலாச்சார மற்றும், சமயப் பன்மைத்தன்மையை அழிக்கும் கருத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கவலை தெரிவித்தார்.

ஈராக்கில் இடம்பெறும் அடக்குமுறைகளால், 2003ம் ஆண்டுக்குமுன் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒரு இலட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இந்த உலக நாளில், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, மாலி போன்ற நாடுகளில் இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ள கத்தோலிக்கரை நினைவுகூர்வோம் என்றும், Heine-Geldern அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்திற்குப் பலியாவோரை நினைவுகூரும் உலக நாளுக்கு, அடுத்த நாளை,  அதாவது, ஆகஸ்ட் 22ம் தேதியை, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாளாக, ஐ.நா. நிறுவனம், 2019ம் ஆண்டில் அறிவித்தது. (Zenit)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...