மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில், அழகான கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரைக்கு அருகில் ஒரு குகையும் இருந்தது. அந்த கடற்கரைக்கு ஆள்கள் அவ்வளவாகச் செல்வதில்லை. அதிலும் அந்த குகைக்குள் யாருமே போகமாட்டார்கள். அதனால் அந்த குகை, எப்போதும் ஆள் நடமாட்டமே இல்லாமல்தான் இருக்கும். இப்படியிருக்கும்போது, வாழ்வில் விரக்தியை உணர்ந்த இளைஞன் ஒருவன், தனிமையாய் இருக்க விரும்பி, ஒரு நாள் அந்த கடற்கரையைத் தேடிச் சென்றான். அங்கு அந்தக் குகையைப் பார்த்த அவன், அதற்குள் நுழைந்தான். குகையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அந்தக் குகையில் இருந்த ஒரு பாறையின் இடுக்கில், ஒரு சிறிய காகிதப் பை இருப்பதைக் கண்டான். என்ன இது, இப்படி பொறுப்பில்லாமல் குப்பையைக் கொண்டுபோய் இந்த இடுக்கில் வைத்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டே, குப்பையில் போடுவதற்காக அந்த பையை எடுத்தான். அந்தப் பையைப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அந்தப் பை நிறைய களிமண் உருண்டைகள் இருந்தன. யார் இந்த உருண்டைகளைச் செய்து வைத்திருப்பார்கள்? ஒருவேளை சிறாரின் வேலையாக இருக்குமோ? என்று, அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. சரி என்று, ஏதோ ஒரு சிந்தனையில், அந்தப் பையை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரையில் நடக்கத் தொடங்கினான். இதமான கடற்கரை காற்று. அதை இரசித்துக்கொண்டே, அந்த பையிலிருந்த களிமண் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, கடல் தண்ணீரில் எறிந்துகொண்டே நடந்தான். கடைசியில், அந்த காகிதப் பையில் மூன்று உருண்டைகள் மீதம் இருந்தன. அதில் ஒரு உருண்டையை எடுத்து எறியப்போகும்போது, அதில் ஒரு வெடிப்பு இருந்தது. பின்னர் அது உடைந்துவிட்டது. அதற்கு நடுவில் ஒரு கல்லும் மின்னிக்கொண்டிருந்தது. அதைக் கூர்ந்து பார்த்த அந்த இளைஞன், அட என்ன அழகான இரத்தின கல் என்று வியந்தான். அந்த பையில் மீதமிருந்த இரண்டு களிமண் உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அவற்றிலும் இரத்தின கற்கள். அப்படியானால் கடலில் வீசியெறிந்த அத்தனை களிமண் உருண்டைகளிலுமே விலையுயர்ந்த இரத்தின கற்கள் அல்லவா இருந்திருக்கும், ஐயோ சிந்திக்காமல், முட்டாள்தனமாக, எவ்வளவு பெரிய தவறுசெய்துவிட்டோம் என்று வருந்தினான். பின்னர், வேக வேகமாக கடலில் இறங்கி, அந்த உருண்டைகளைத் தேடினான். கடலில் களிமண் உருண்டைகளையும் காணவில்லை, இரத்தின கற்களையும் காணவில்லை. ஆனாலும், அந்த இளைஞன் அவற்றைத் தேடி, நீண்டநேரம் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தான்.
இந்த கதையில் சொல்லப்பட்ட களிமண் உருண்டைகள் என்பது நமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள். கடவுள் நமக்குக் கொடுக்கும் வாய்ப்புக்கள் பலநேரங்களில் நேரடியாக நம்மை வந்தடையாது. இந்த இரத்தின கற்கள் எவ்வாறு களிமண் உருண்டைகளில் ஒளிந்து இருந்தனவோ, அதேபோல், வாழ்வில் நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை, மேலோட்டமாகப் பார்த்தால், அவை கடினமானதாகவும் சாதாரணமானதாகவும் தெரியும். ஆனால் அவற்றை ஆராய்ந்து தெரிந்துகொண்டு பயன்படுத்தும்போது மட்டும்தான், அவை இரத்தின கற்களாக மாறும். நாம் பல நேரங்களில் சாதாரணமாக இருக்கிறது என்று நினைத்து, பல விடயங்களை தவற விட்டுவிடுகிறோம். நமக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புக்களையும் கைநெகிழச் செய்து விடுகிறோம்.
திருப்பூர் தொழிலதிபர்
திருப்பூரில் துணி ஆலை ஒன்றை நடத்தி வந்த ஒருவரது வாழ்வு வெற்றிகரமாக இருந்தபொழுது, திடீரென அவருக்கு தொழிலில் தோல்வி ஏற்பட்டது. அவரது பங்களா, கார்கள் எல்லாம் பறிபோய்விட்டன. இறுதியில் வெறும் ஆளாக, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. அவரைப் பார்த்து ஊரே சிரித்தது. யாரும் மதிக்கவில்லை. ஆனால் அவர் மட்டும் கலங்கவில்லை. ‘இப்பொழுது என்னிடம் ஒன்றும் இல்லைதான். ஆனால், எதிர்காலத்திலும் என்னிடம் ஒன்றுமிருக்காது என்று அர்த்தமில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று, அந்த நிறுவனத்தில் முழுஈடுபாட்டுடன் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த நிறுவனத்தில், பொருட்களை வாங்கி விற்கும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அவர் பல இடங்களுக்கும் சென்று பல பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டும். பல பெருள்களை வாங்க வேண்டும். இப்படி அவர் செய்துகொண்டிருந்தபோது, முக்கியமான ஒரு அம்சத்தை அவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக விலைக்கு விற்பதைக் கண்டார். அதற்கு அதிகப் போட்டியும் இல்லை. ஆனால் உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ மிக அதிகமாக இருந்தது. எனவே, “இந்தப் பொருளை ஏன் நாம் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம், அவரது மனதிற்குள் வேலைசெய்ய ஆரம்பித்தது. அதைப் பற்றிய விவரங்களை எல்லாம் சேகரித்தார். சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து ஒரு வாடகைக் கட்டடத்தில், தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்தபோது நிறையத் தொடர்புகள் இருந்ததால், பல ஆர்டர்கள் இவருக்குக் கிடைத்தன. படிப்படியாக வளர்ந்து, மீண்டும் அவர் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.
இது ஓர் உண்மை நிகழ்வு என, விகடன் இதழில் ஒரு பதிவு இருந்தது. வெற்றிகரமாக முதலில் வாழ்வை நடத்திய இந்த தொழிலதிபர், இடையில் வீழ்ச்சி அடைந்தார். ஆனாலும், அவர் தனது மனதை மட்டும் தளரவிடவில்லை. மீண்டும் வெற்றிபெறுவேன் என்று, அவரில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வு, அவரை மீண்டும் வெற்றிபெற வைத்துள்ளது. ஆம். தொழிலில் எத்தகைய தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும், அதையும் வாய்ப்புக்களாகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், வெற்றி நிச்சயம் கிட்டும். அதேபோல, சோதனை, தோல்வி, இடறல் போன்று, எது நேரிட்டாலும், அந்த நேரங்களிலும், ஏதேனும் சாதிக்க முடியும் என்ற, உடன்பாட்டு எண்ணம் இருக்க வேண்டும். இந்த மனநிலை இருந்தால், எந்தச் சூழ்நிலையிலும் யாரும் வெற்றிபெறுவார்கள் என்பது உறுதி. வாழ்வில், எல்லாவற்றிலும், நல்ல, நம்பிக்கையூட்டும் பக்கங்களை மட்டுமே பார்த்தால், மற்றவர்களைவிட, மிக மேலான வளமான வாழ்வு வாழ இயலும்.
பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியன்
பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் பற்றி ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு. 1796ம் ஆண்டு, நெப்போலியன், தன் படைவீரர்களோடு ஆஸ்திரியாவின்மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றினார். அதற்கு முன்னதாக ஆஸ்திரியா, இத்தாலி நாட்டை, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தாலியையும் நெப்போலியன் கைப்பற்ற விரும்பினார். இதற்காக, ஆஸ்திரியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே இருக்கும் உயரமான ஆல்ப்ஸ் மலை வழியாக, இத்தாலிக்குச் செல்ல வழி இருக்கின்றதா என்று பார்த்துவரத் தன்னுடைய படையில் இருந்த ஒரு சில அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அங்குச் சென்று பார்த்துவிட்டு, திரும்பி வந்த அந்த அதிகாரிகள், ‘இல்லை’, ‘முடியாது’ என்று பதில் சொன்னார்கள். இதைக் கேட்ட நெப்போலியன் அவர்களிடம், “ நெப்போலியனின் படையில் இருந்துகொண்டு ‘இல்லை’, ‘முடியாது’ போன்ற வார்த்தைகள், நம் ஏட்டில் இருக்கவே கூடாது” என்று சொன்னார். அதோடு நிறுத்திவிடாமல், தன்னிடம் இருந்த படைவீரர்களை ஒன்று திரட்டி, இத்தாலியை நோக்கிப் புறப்பட்டார். நெப்போலியன், வழியில் இருந்த மிக நீண்ட உயரமான ஆல்ப்ஸ் மலையில், தன்னோடு இருந்த படைவீரர்களோடு ஏறினார். இடையில் ஒரு செங்குத்துப் பாறை வந்தது. அவரோடு இருந்த படைவீரர்களெல்லாம் மிரண்டு போய்நிற்க, நெப்போலியன், “வீரர்களே! முன்வைத்த காலை பின் வைக்காமல், தொடர்ந்து முன்னேறுங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார். நெப்போலியனிடமிருந்து இப்படியொரு கட்டளை வந்ததும், படைவீரர்கள் யாவரும் அந்தச் செங்குத்துப் பாறையில் ஏறினார்கள். நான்கு நாள்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, யாவரும் அந்தச் செங்குத்துப் பாறை மீது ஏறி, இத்தாலியை அடைந்தார்கள். அங்கு மொந்தே பெல்லோ (Monte bello), அதாவது அழகான மலை என்ற இடத்தில், நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களோடு சேர்ந்து, எதிரிகளோடு போர்தொடுத்து வெற்றியும் பெற்றார். இவ்வாறு நெப்போலியன், தன் மீதும், தன்னுடைய வீரர்கள் மீதும் கொண்டிருந்த துணிச்சலான நம்பிக்கையால், அவரது வாழ்வு ஏட்டில் ‘முடியாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் ஆக்கினார்.
கடலூரை சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாஸ் என்ற மாற்றுத்திறனாளி, (ஜூலை, 2018ம் ஆண்டு), கடலூர் துறைமுகத்தில் இருந்து, தேவனாம்பட்டினம் வரை, ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். கிடைக்கிற வாய்ப்புகளை நழுவ விடாமல், முழு முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு, உழைத்தால் சாதனை படைக்கலாம் என, இவரைப் போன்ற பலர், பல்வேறு மாற்றுத்திறன்களோடு நிரூபித்துள்ளனர். வாழ்வு என்ற ஏணியின் உச்சியில் ஏறியவர்களின் முன்னைய வாழ்வு சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, பலரை கடும் வறுமை வாட்டியிருக்கிறது. தொடர்ந்து பல சோதனைகள், தோல்விகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆயினும், என்னால் முடியாது என்ற சிந்தனைக்கே இடம்கொடுக்காமல், ஒவ்வொரு வாய்ப்பையும், சிறியது என்று ஒதுக்கிவிடாமல், அதனை ஏணிப்படியாக அமைத்தவர்கள் அவர்கள். கொரோனா கொள்ளைநோயின் முடக்கத்தை, வேறு எந்த தடங்கலை எதிர்கொண்டாலும், என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற கூற்றை மனதிற்குள்ளே அடிக்கடி ஓடவிடுவோம். வாழ்வில் வெற்றிக்கான வாய்ப்புகள் எந்த வடிவத்திலும் வரலாம். அதைப் பயன்படுத்த கற்றுக்கொண்டால், வெற்றி நிச்சயம். வாழ்வே போர்க்களம்தான். அதை நாம் வாழ்ந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment