Monday, 3 August 2020

கிறிஸ்தவ கலாச்சார பாரம்பரியம் காக்கப்பட கர்தினால் சாக்கோ

ஈராக்கில் கிறிஸ்தவ இலக்கியம்

ஒரு நாட்டு மக்களின் கலாச்சார பாரம்பரியம், வாழப்படுகின்ற ஒரு நினைவு மற்றும், மாபெரும் சொத்து. இது கடந்தகாலத்தை கட்டியெழுப்புவதற்கு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தை அமைப்பதற்கும் உதவுகின்றது - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில் இஸ்லாமியப் பாரம்பரியச் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுபோல், அந்நாட்டின் கிறிஸ்தவ கலாச்சார, வரலாறு மற்றும், கலைவேலைப்பாடுகளை உள்ளடக்கிய பாரம்பரியச் சொத்துக்களும் பாதுகாக்கப்படுமாறு, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக்கின் பாடப் புத்தகங்களில், அந்நாட்டு கலாச்சாரத்திற்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய தொண்டு, எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது வேதனை அளிக்கின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

ஈராக்கின் Al-Mustansiriya பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, அந்நாட்டின் கல்வி, கலாச்சார மற்றும், அறிவியல் தேசிய குழு, ஜூலை 29,30 அதாவது, இப்புதன், மற்றும், வியாழன் ஆகிய இருநாள்கள் ஏற்பாடு செய்த மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்வாறு கூறினார்.

“உலகப் பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தன் கருத்துக்களை எடுத்துரைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், மக்களின் கலாச்சாரப் பாரம்பரியம், வாழப்படுகின்ற ஒரு நினைவு மற்றும், மாபெரும் சொத்து என்றும், இது கடந்தகாலத்தை கட்டியெழுப்புவதற்கு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தை அமைப்பதற்கும் உதவுகின்றது என்றும் கூறினார்.

மற்றவரையும், அவர்களின் வாழ்வு மற்றும், பன்மைத்தன்மையையும், ஏற்பதற்கும் மதிப்பதற்கும் உதவுவதாக, ஈராக்கின் பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய திறந்தமனமே ஒருவரின் பாரம்பரிய வளங்கள் பாதுகாக்கப்பட முக்கியமானது என்று கூறினார்.

மேலும், இத்தகைய திறந்தமனம், Nimrod, Hatra மற்றும், Mosul ஆகிய இடங்களில் நினைவுச்சின்னங்களையும், பாரம்பரிய வளங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அழித்த, ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிரவாதக் கருத்தியலைத் தகர்த்துவிடும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஈராக்கின் கலாச்சார பாரம்பரிய வளங்கள், ஒரு தனிப்பட்ட வகுப்பினருக்கு, இனத்தவருக்கு, அல்லது மதத்தவருக்கு மட்டும் உரியதல்ல, மாறாக, அது உலகளாவிய சின்னம், அனைத்து மனித சமுதாயத்தின் சொத்தின் ஊற்று, அது எண்ணெய் வளத்தைவிட மிக முக்கியமானது, ஏனெனில் அவை சரியாகப் பராமரிக்கப்பட்டால், அவை அழியாதவை என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள், அனைவருக்கும் நினைவுபடுத்தினார். (AsiaNews)

No comments:

Post a Comment