கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஓர் இளைஞர், ஒரு ஜென் குருவிடம் வந்தார். அவர் எல்லாவற்றையும் அனுபவித்துச் சலித்துவிட்டதால் ஜென்குருவிடம் வந்து, “ஐயா, எனக்கு உலகம் சலித்துப் போய்விட்டது. உங்களிடம் சீடனாக சேர விரும்புகிறேன்”, எனச் சொன்னார்.
குருவோ, "எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது ஈடுபட்டதுண்டா?" எனக் கேட்டார்.
இளைஞர் சிந்தித்துவிட்டு, “ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும்”, எனக் கூறினார்.
குரு, இளைஞரிடம், “நீ காத்திரு”, எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளரை அழைத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஒரு துறவியைச் சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார்.
சதுரங்க அட்டை கொண்டு வரப்பட்டது. துறவி வந்தார். அவருக்குச் சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்துவிட்டார்.
குரு, அவரை பார்த்து, “துறவியே கேள், இது ஓர் ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப்பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டிவிடுவேன்”, என்றவர், இளைஞரிடம் திரும்பி, “இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்கான போட்டி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன் என்பதை நினைவில் கொள்”, என்றார்.
போட்டி துவங்கியது. இளைஞருக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?
துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞர், அருமையாக விளையாடத் தொடங்கினார். அவர் அதுபோல் இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றிபெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞர் அதில் முழ்கிய ஒரு சில நிமிடங்களில் அருமையாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினார். துறவி தோற்றுப்போக ஆரம்பித்தார். இளைஞருடைய வெற்றி நிச்சயமாகிவிட்டது.
அவர் அந்த துறவியைப் பார்த்தார். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பன்னிரண்டு வருடத் தியானம், அவரை, மலர்போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே அவர்மேல் இளைஞருக்கு அன்பு ஏற்பட்டது.
இந்த கருணையை உணர்ந்த அக்கணமே அவருக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு இளைஞர், தெரிந்தே காய்களைத் தவறாக நகர்த்தினார். ஏனெனில், தான் இறந்தால் எதுவும் இழப்படைய போவதில்லை. ஆனால், இந்த துறவி கொலை செய்யப்பட்டால், அழகான ஒன்று அழிந்துவிடும் என்றெண்ணி, துறவியை வெற்றிபெறச் செய்வதற்காக, தெரிந்தே, தவறாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினார், இளைஞர்.
அந்நொடியில் குரு மேசையை தலைகீழாகக் கவிழ்த்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கினார். அவர், 'இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்றுவிட்டீர்கள்', எனக் கூறினார்.
குரு, “மகனே நீ வெற்றிபெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி, இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னைச் சீடனாக்கிக் கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய்” எனக் கூறினார்.
இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியம் என்று உணரும்போது, நீ மற்றவருக்காகப் பிரதிபலனின்றி உன்னைத் தியாகம் செய்யும்போது, நீ கருணை உடையவனாகிறாய்.
No comments:
Post a Comment