Saturday, 8 August 2020

ஹிரோஷிமா - 75ம் ஆண்டு நினைவு - டோக்கியோ பேராயர்

 ஹிரோஷிமா நினைவு தினம்


இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 75ம் ஆண்டில், இன்னும் கூடுதலான உறுதியோடும், தொடர் முயற்சியோடும் உலக அமைதிக்காக உழைக்க நம்மையே அர்ப்பணிப்போம் – டோக்கியோ பேராயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹிரோஷிமாவில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, "கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்து, எதிர்காலத்திற்கு பொறுப்பேற்பது" என்ற கருத்துடன், ஜப்பானின் டோக்கியோ உயர் மறைமாவட்ட பேராயர், Tarcisius Isao Kikuchi அவர்கள் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி நிலை, இவ்வுலகம் இதுவரைக் கண்டிராத ஒரு நெருக்கடி என்றும், இது, உலகெங்கும் சமுதாய கட்டமைப்பை, சீர்குலையச் செய்துள்ளது என்றும் பேராயர் Kikuchi அவர்கள் தன் விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலுக்கு நாம் வழங்கக்கூடிய ஒரே பதிலிறுப்பு, உலகளாவிய ஒருங்கிணைப்பு என்பதை, தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள பேராயர் Kikuchi அவர்கள், வாழ்வுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் கொள்ளைநோய் காலத்தில், நம்மிடையே உருவாகியுள்ள சமுதாய புறக்கணிப்பு, மற்றும், பிரிவுகள், நம்மை இன்னும் வலுவற்றவர்களாக மாற்றுகின்றன என்று கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 75ம் ஆண்டில், இன்னும் கூடுதலான உறுதியோடும், தொடர் முயற்சியோடும் உலக அமைதிக்காக உழைக்க நம்மையே அர்ப்பணிப்போம் என்ற கூற்றுடன், பேராயர் Kikuchi அவர்களின் விண்ணப்பம் நிறைவடைகிறது.

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 15ம் தேதி முடிய, ஜப்பான் ஆயர் பேரவையால் கடைபிடிக்கப்படும் "அமைதிக்காக பத்து நாள்" என்ற முயற்சியின் ஒரு பகுதியாக, டோக்கியோ பேராயர் Tarcisius Isao Kikuchi அவர்களின் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியிலும் கொல்லப்பட்டவர்களின் நினைவாகவும், இவ்வுலகில் அமைதி நிலவவேண்டும் என்பதற்காகவும், ஜப்பான் ஆயர் பேரவை, "அமைதிக்காக பத்து நாள்" என்ற முயற்சியை ஒவ்வோர் ஆண்டும் கடைபிடித்து வருகிறது.

No comments:

Post a Comment