மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும், அதில் இறந்தவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், ஆகஸ்ட் 08, இச்சனிக்கிழமையை இறைவேண்டல் நாளாக கடைப்பிடிக்குமாறு, ஈராக் திருஅவை தலைவர், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக்கின் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், ஈராக் கத்தோலிக்கருக்கு விடுத்துள்ள அழைப்பில், லெபனான், ஈராக் மற்றும், அப்பகுதி மக்களை எல்லாவிதத் தீமைகளிலிருந்து இறைவன் காப்பாற்றுமாறு மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
லெபனான் மக்களுக்காக, இச்சனிக்கிழமையன்று நோன்பிருந்து செபித்து அந்நாட்டுத் திருஅவையோடு நமக்குள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்போம் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆயர்களின் இரங்கல் செய்தி
ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) தலைவரான, லக்சம்பர்க் பேராயர், கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், லெபனானுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், பெய்ரூட்டில் இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும், பலியானவர்களுக்கு, தனது செபங்களையும், தோழமையுணர்வையும் தெரிவித்துள்ளார்.
இந்த வெடி விபத்தில் இறந்தவர்கள், இறைவனில் நிறைஅமைதியை பெறவும், காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் ஐரோப்பிய ஆயர்களும், விசுவாசிகளும் செபிப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் Hollerich அவர்கள், புலம்பெயர்ந்தோரை, உடன்பிறந்த உணர்வோடு வரவேற்கின்ற மற்றும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ உழைக்கின்ற, நன்மனம்கொண்ட லெபனான் நாட்டிற்காகச் செபிப்பதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் மாலையில், பெய்ரூட் நகரின் துறைமுகத்தில், 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு ஒன்று வெடித்ததில், குறைந்தது 140 பேர் உயிரிழந்துள்ளனர், ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் மற்றும், இந்த விபத்தால், ஏறத்தாழ எண்பதாயிரம் சிறார் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, யூனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
இந்த வெடி விபத்தில், ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் குடியிருப்புக்களை இழந்துள்ள நிலையில், 4 மருத்துவமனைகள், மற்றும் 10 கிறிஸ்தவ கோவில்கள் உட்பட, பல கட்டடங்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன.
No comments:
Post a Comment