கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
ஆகஸ்ட் 4, இச்செவ்வாய்க்கிழமை மாலை, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி அவசர உதவிகளை வழங்க, ஒருசில கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்கள் முன்வந்துள்ளன.
கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களான, லெபனான் காரித்தாஸ், CAFOD அமைப்பு, Aid to the Church in Need (ACN) என்ற அமைப்பு, PIME மறைப்பணி அமைப்பின் பிறரன்பு மையம் ஆகியவை, உடனடியாக, தங்கள் உதவிகளுடன் முன்வந்துள்ளன.
லெபனான் காரித்தாஸ் அமைப்பின் 200 பணியாளர்களும், சுயவிருப்பத் தொண்டர்களும் 15 குழுக்களாகப் பிரிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடி உதவிகளைத் துவக்கியுள்ளனர்.
வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு, உணவு, மருந்து, உடைகள், மற்றும், தங்குமிடம் ஆகிய வசதிகளை ஏற்பாடுச் செய்யத் துவங்கியுள்ளதுடன், உளரீதியான ஆலோசனைகளையும் அவர்களுக்குத் துவக்கியுள்ளதாகக் கூறினார், லெபனான் காரித்தாஸ் இயக்குநர், அருள்பணி Paul Karam.
காரித்தாஸ் அமைப்பும், CAFOD நிறுவனமும் இணைந்து உதவிகளை வழங்கிவரும் அதேவேளையில், துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் ACN கத்தோலிக்க அமைப்பு, உடனடி அவசர உதவியாக இரண்டரை இலட்சம் யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.
ஏற்கனவே பொருளாதார, மற்றும், நிதி நெருக்கடிகளால் துன்புற்றுவரும் லெபனானின் தலைநகரிலுள்ள துறைமுகப்பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தால், எண்ணற்றோர் ஏழ்மை நிலைக்கும், பிறரை சார்ந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள லெபனான் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், லெபனானுடன் உலக நாடுகளின் ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு ஒன்று வெடித்ததில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 4000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் குடியிருப்புக்களை இழந்துள்ள நிலையில், 4 மருத்துவமனைகள், மற்றும் 10 கிறிஸ்தவ கோவில்கள் உட்பட, பல கட்டடங்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன.
No comments:
Post a Comment