மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிரேசில் நாட்டில், கொரோனா கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியைக் களைவதற்கு சரியான நடவடிக்கைகளை, அரசு கையாளவில்லை என்று, அந்நாட்டின் 150க்கும் அதிகமான ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.
பிரேசில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, 150க்கும் அதிகமான ஆயர்கள் இணைந்து தயாரித்துள்ள மடல், ஆகஸ்ட் 05, இப்புதனன்று கூடவிருக்கும் பிரேசில் ஆயர் பேரவையின் உயர்மட்ட குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.
பழங்குடியின மக்கள், ஆற்றங்கரைகளில் வாழ்கின்ற குழுமங்கள், நகரங்களின் ஒதுக்குப்புறங்களில் வாழ்வோர், தெருக்களில் வாழ்வோர், ஆப்ரிக்க-பிரேசில் இனத்தவர், என, பிரேசில் சமுதாயத்தில் நலிவடைந்த, மற்றும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்கள், அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று, ஆயர்களின் மடல் கூறுகின்றது.
"இறைமக்களுக்கு மடல்" என்ற தலைப்பில், 150க்கும் அதிகமான ஆயர்கள் கையெழுத்திட்டுள்ள அம்மடலில், தற்போது பிரேசில் நாடு எதிர்கொள்ளும் இன்னல்நிறைந்த தருணம், ஒரு புயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நாடு எதிர்நோக்கும் நலவாழ்வு பிரச்சனை, ஒட்டுமொத்த பொருளாதாரச் சீர்குலைவு, அதனால் உருவாகியுள்ள அரசியல் மற்றும், நிர்வாகப் பிரச்சனை போன்றவை, இந்தப் புயலுக்குக் காரணம் என்றும், அம்மடல் குறிப்பிட்டுள்ளது.
உலகில், கத்தோலிக்கர்களை பெருமளவு கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரேசிலின் ஆயர் பேரவையில், 450க்கும் அதிகமான ஆயர்கள் உள்ளனர். 150க்கும் அதிகமான ஆயர்கள் தயாரித்துள்ள இம்மடல், மொத்த ஆயர் பேரவையின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)
No comments:
Post a Comment