மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்-6
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், இத்தாலி நாட்டின் வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தையாகப் பணியாற்றினார். கர்தினால் அல்பினோ லூச்சியானியாகிய அவர், அக்காலக்கட்டத்தில் எழுதிய மடல்களை எல்லாம் தொகுத்து, "புகழ்பெற்றவர்களுக்கு" என்று பொருள்படும் Illustrissimi என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலில், கர்தினால் லூச்சியானி அவர்கள் கொண்டிருந்த பல்வேறு விவகாரங்கள் குறித்த, அவரின் எண்ணங்கள், கருத்தியல்கள் காணக்கிடக்கின்றன. கம்யூனிசம் பற்றிய திருஅவையின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் அதில் வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்கம், கம்யூனிசத்திற்கு முரணானது என்றும், கிறிஸ்தவ விசுவாசம், கம்யூனிசத்திற்கு எதிரான தன் நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கம்யூனிசக் கொள்கையுடைய மாணவர்கள், வெனிஸ் மாநில கொள்கைகளில் மாற்றங்களை வலியுறுத்தியபோது, அவர்களுக்கு எதிராக இவர் போராடினார். கத்தோலிக்க விசுவாசத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த பிரிவினைவாதக் குழுக்களை இவர் தடைசெய்தார்.
பல்சமய உரையாடல் - இஸ்லாம்
கர்தினால் லூச்சியானி அவர்கள், வெனிஸ் முதுபெரும்தந்தையாகப் பணியாற்றியபோது, முஸ்லிம் மக்களின் நண்பராக விளங்கினார். இஸ்லாம் மதத்திற்கு விசுவாசமாக இருப்பவர்கள், தங்களின் மதநம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக, வெனிஸ் உயர்மறைமாவட்டத்தில், மசூதி ஒன்றைக் கட்டுவதற்கு அவர்கள் உரிமையைக் கொண்டுள்ளனர் என்று, இவர் கத்தோலிக்கரிடம் கூறினார். 1964ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மனித மாண்பு என்று பொருள்படும் Dignitatis humanae கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டது. சமய சுதந்திரம் பற்றிய இந்த கொள்கை விளக்கம் குறித்து குறிப்பிட்ட கர்தினால் லூச்சியானி அவர்கள், "உரோம் நகரில் நான்காயிரம் முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மசூதியைக் கட்டிக்கொள்ளட்டும் என்று நம்மால் சொல்ல முடியாது, அதற்கு மாறாக, அவர்கள், தங்களுக்கென மசூதி ஒன்றைக் கட்டுவதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் உணரவேண்டும்" என்று கூறினார்.
உண்மையான சுதந்திரம்
கர்தினால் லூச்சியானி அவர்கள், வித்தோரியோ வெனெத்தோ மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றியபோது, 1962ம் ஆண்டு முதல், 1965ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அனைத்து அமர்வுகளிலும் பங்குபெற்றார். ஒரேயொரு உண்மையான மதமே உண்டு. இயேசு கிறிஸ்துவே உண்மை, அந்த உண்மையே, உண்மையான விடுதலையை அளிக்கும். அதேநேரம், எந்த ஒரு காரணத்திற்காகவும் உண்மையான கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்காதவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அவர்களின் மதங்களைச் சுதந்திரமாக அறிவிக்கலாம். இவ்வாறு "Dignitatis humanae" என்ற கொள்கை விளக்கம் பற்றி எழுதியுள்ள கர்தினால் லூச்சியானி அவர்கள், உண்மையான மற்றும், போலியான சுதந்திரம் ஆகியவை பற்றிய தெளிவானதொரு புரிதலையும் விளக்கியுள்ளார். உண்மையான சுதந்திரம், கடவுளிடமிருந்து வருகிறது. அது மனிதரை சுதந்தர மனிதராக ஆக்குகிறது. எனினும், தவறான போதனைகள் கடவுளிடமிருந்து வருபவை அல்ல என்பதை திரும்பத் திரும்ப அவர் கூறியுள்ளார். நாம் தவறுசெய்பவர்களாக, அல்லது பாவம் புரிபவர்களாக இருந்தாலும், உண்மையைப் புறக்கணிக்கும் எவரையும், அதனை நம்புமாறு கட்டாயப்படுத்த முடியாது. தவறு செய்வதற்கு கடவுள் உரிமை அளிக்கவில்லை. மேலும், சமய சுதந்திரம், ஒருவரால் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஒருவர் ஒரு மதத்தைத் தேர்ந்துகொள்வது சுதந்திரமாக இடம்பெறவேண்டும். இல்லையெனில் அவரது நம்பிக்கை உண்மையானதாக இருக்காது. எனவே அமைதியைக் காப்பதற்கும், பன்மைத்தன்மை நிறைந்த சமுதாயத்தில் வாழ்வதற்கும் ஒருவர், ஒரு மதத்தை தனது சொந்த விருப்பத்தின்பேரில் தெரிவுசெய்து அதனைச் சுதந்திரமாக அறிக்கையிடுவது இன்றியமையாததாகும்.
தூய வாழ்வுக்கு உலகளாவிய அழைப்பு
கர்தினால் லூச்சியானி அவர்கள், வித்தோரியோ வெனெத்தோ ஆயராகப் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்தே, உலகளாவிய புனிதத்தன்மை அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார். அதுவே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திலும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து கத்தோலிக்கரும் கடவுளுக்குப் பணிபுரிய வேண்டும் என்ற உணர்வோடு வாழ்ந்து வந்தால், அனைவரும் புனிதத்தன்மையை அடையலாம் என்று இவர் நம்பிவந்தார். அனைவரும் புனிதர்களாக வாழ்வதற்கு, எவ்விதத் தடைகளும் இல்லை என்று கூறிவந்த கர்தினால் லூச்சியானி அவர்கள், கத்தோலிக்கர், கடவுள் மீதுள்ள அன்பை அறிவிக்கும்போது, "என் கடவுளே, நான் புனிதராக வாழ விரும்புகிறேன், அதை அடையவே முயற்சிக்கிறேன்" என்று சொல்லவேண்டும் என்று கூறினார்.
கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் என்ற பெயரோடு திருஅவையின் தலைமைப்பணியை நிறைவேற்றிய 33 நாள்களில், இறைஇரக்கத்தைப் பற்றி மூன்று முறை பேசியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தன் புதன் பொது மறைக்கல்வியுரையில், கடவுள் மீதுள்ள நம்பிக்கை வழியாக, அவரிடம் முழுவதும் சரணாகதி அடைவதே இரக்கம் என்று கூறினார்.
No comments:
Post a Comment