வருகிற ஆகஸ்ட் மாதத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமுதாயம், கப்பல் பணியாளர்கள், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் சிறப்பாகச் செபிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
தங்களின் சொந்த நாடுகள், குடும்பங்கள் மற்றும், தலத்திருஅவைகள் ஆகியவற்றை விட்டு வெகுதொலைவிலும், தங்களின் வருங்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலிலும் பணியாற்றிவரும் கடல்சார் தொழிலாளர்கள் அனைவருக்காகவும் சிறப்பாகச் செபிப்போம் என்று, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜூலை 12, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக, பல நாடுகளில், சமுதாய விலகல்முறை நீட்டிக்கப்பட்டிக்கும் இவ்வேளையில், கடல்சார் தொழிலாளர்கள், பல சவால்களுக்கு மத்தியில், தொடர்ந்து பணிகளை ஆற்றிவருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடல் ஞாயிறு கடைப்பிடிக்கப்படத் துவங்கியதன் நூறாம் ஆண்டு, பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில், வருகிற அக்டோபர் மாதத்தில் சிறப்பிக்கப்படவிருந்தவேளை, தற்போதைய நெருக்கடிநிலையால், இந்நிகழ்வு, 2021ம் ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதையும் கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்துகள், மருத்துவ கருவிகள் உள்ளிட்ட, மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருள்களில், ஏறத்தாழ 90 விழுக்காடு, கப்பல்கள் வழியாகவே கொண்டுவரப்படுகின்றன என்றும், இந்த சரக்கு கப்பல்களை துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்துவதற்கு, கப்பல் நிறுவனங்கள், நாடுகளின் அனுமதியைப் பெறுவதற்கு, கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார், கர்தினால் டர்க்சன்.
உலகளாவிய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற, கடல்சார் தொழிலாளர்களின் பணி, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், பல்வேறு நிறுவனங்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், கடல் ஞாயிறன்று, திருஅவை, அத்தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைச் சிறப்பாக வலியுறுத்த விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ ஒரு இலட்சம் கடல்சார் தொழிலாளர்கள், தங்கள் பணி ஒப்பந்தத்தை முடித்து, வீடுகளுக்குத் திரும்புவதற்கு ஆவலாய் உள்ளவேளை, கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளால், அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு, பயணம் மேற்கொள்ள இயலாமல் உள்ளதையும் கர்தினாலின் செய்தி குறிப்பிட்டுள்ளது.
2020ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், கடல்கொள்ளையரின் தாக்குதல்கள் 24 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும், 2019ம் ஆண்டில், இதே காலக்கட்டத்தில் இதே அளவிலே தாக்குதல்கள் இடம்பெற்றன என்றும், கொரோனா தொற்றுக்கிருமி காலத்திலும், கடல்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடரந்து இடம்பெறுகின்றன என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறியுள்ளார்.
“கடல்சார்பணியாளர்களே நீங்கள் தனியாக இல்லை, நீங்கள் மறக்கப்படவில்லை” என்று பன்னாட்டு கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலர் Kitack Lim அவர்கள் கூறியுள்ளதுபோன்று, திருஅவையும் உங்களை மறக்கவில்லை என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், வருகிற ஆகஸ்ட் மாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபக்கருத்தும், கடல்சார் தொழிலாளர் பற்றியதே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருகிற ஆகஸ்ட் மாதத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமுதாயம், கப்பல் பணியாளர்கள், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் சிறப்பாகச் செபிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது எனவும், இவர்களையும், இவர்களுக்கு ஆன்மீகப் பணியாற்றவோரையும், கடலின் விண்மீனாகிய அன்னை மரியாவின் பாதுகாவலில் வைப்பதாகவும், தன் செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் டர்க்சன்.
No comments:
Post a Comment