Friday, 31 July 2020

மனித வர்த்தகத்தில் அதிக அளவில் சிக்கியுள்ள குழந்தைகள்

மனித வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட சிறார்

மனித வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்களையும், இந்தக் கொடுமைக்கு பலியானோரையும் அடையாளம் காண்பதற்கு, உலக அரசுகள் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் - அகில உலக காரித்தாஸ் நிறுவனம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்களையும், இந்த கொடுமைக்கு பலியானோரையும் அடையாளம் காண்பதற்கு, உலக அரசுகள் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று, அகில உலக காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

மனித வர்த்தகத்தை வளர்க்க உதவிய கொள்ளை நோயும், முழு அடைப்பும்

மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் ஜூலை 30 சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், இந்தக் கொள்ளை நோயும், அதன் விளைவாக சுமத்தப்பட்டுள்ள முழு அடைப்பும், மனித வர்த்தகத்தை வளர்ப்பதற்கு வாய்ப்புக்களாக அமைந்துவிட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மனித வர்த்தகத்தை ஒழிக்க பாடுபட்டுவரும் 46 கிறிஸ்தவ நிறுவனங்களின் கூட்டமைப்பான COATNET என்ற அமைப்புடன், அகில உலக காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து இந்தக் கொடுமையைப் போராடும் வழிகளைப் பரிந்துரைத்துள்ளது.

நலிவுற்றோர், மனித வர்த்தக இலக்குகள்

நலிவுற்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், மனித வர்த்தகம் என்ற கொடுமைக்கு எளிதில் இலக்காகின்றனர் என்பதை உணர்ந்து, இவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும், இந்தக் கொள்ளைநோய் காலத்தில் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அகில உலகக் காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச் செயலர், திருவாளர் அலோய்சியஸ் ஜான் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்டுள்ள முழு அடைப்பு என்ற ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி, மனித வர்த்தகத்தில் சிக்கியிருப்போரை அடைத்து வைத்துள்ள வர்த்தகர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சிக்கியிருப்போரை விடுவிப்பது அவசரத் தேவை என்று, திருவாளர் ஜான் அவர்கள் கூறினார்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மனித வர்த்தகத்தில் சிறுவர், சிறுமியர் அதிக அளவில் சிக்கியுள்ளனர் என்றும், இந்தியாவில் மட்டும் பத்துநாள் காலக்கட்டத்தில் 92,000 குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஐரோப்பாவில் குழந்தைகள் வர்த்தகம்

மேலும், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் "Save The Children Italy" என்ற அமைப்பு, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஐரோப்பாவில் மனித வர்த்தகத்திற்கு பலியாவோரில், நான்கில் ஒருவர் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.

"காணமுடியாத சிறு அடிமைகள் 2019" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில், வர்த்தகம் செய்யப்படும் மனிதர்களில், நான்கில் ஒருவர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இவர்களில் மூன்றில் இருவர் இளம்பெண்கள் அல்லது, சிறுமிகள் என்று கூறப்பட்டுள்ளது.

நைஜீரியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் ஆல்பேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் அல்லது சிறுமிகள், ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக விற்கப்படுகின்றனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...