Wednesday, 22 July 2020

பிறர் பயனுறுமாறு வாழ்தல்

பாலை நிலம்

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்றுவிடக் கூடாது. நாம் பெற்ற இன்பம், மற்றவரும் பெறுமாறு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால், இந்த உலகம் சொர்க்க பூமியாக விளங்கும்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒருவர் பாலைநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழிப்பயணத்திற்கென, பெரிய குடுவை ஒன்றில் அவர் எடுத்துச் சென்ற தண்ணீர் முழுவதுமாக தீர்ந்துவிட்டது. அதேநேரம் அவர் போகவேண்டிய தூரமும் அதிகமாக இருந்தது. தாகத்தால் நாவு வறண்டு, ஏறத்தாழ உயிர்போகும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற மனநிலை அவருக்கு. அப்போது தூரத்தில் குடிசை ஒன்று தெரிந்தது. தட்டுதடுமாறி மிகவும் சிரமப்பட்டு அந்த குடிசையை அடைந்தார் அவர். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் அந்த குடிசைக்கு அருகில் தண்ணீரை அடித்து வெளியேற்றும் ஒரு குழாய் இருந்தது. ஓடிப்போய் அந்த குழாயை வேகமாக அடித்தார். ஆனால் தண்ணீர் வரவில்லை, காற்றுதான் வந்தது. ஐயோ, என்ன செய்வது என்று திகைத்தார் அவர். அப்போது அந்த குழாய் அருகில், ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததைப் பார்த்தார். அதை ஆசையோடு எடுத்துக் குடிக்கப்போனார். அப்போது, அதற்குக் கீழே, ஒரு அட்டையில் ஒரு குறிப்பு இருந்ததைப் பார்த்தார் அவர். இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை அந்த குழாயில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும், அந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, மறுபடியும் இந்த பாட்டிலில் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டுச் செல்லவும்" என்று அதில் எழுதியிருந்தது. அந்த குழாயோ மிகவும் பழையதாக இருந்தது. இருக்கின்ற தண்ணீரையும் அதில் ஊற்றிவிட்டால் அது இயங்குமா? தண்ணீர் வருமா? தண்ணீர் வரவில்லை என்றால், எனது நிலைமை என்னவாகும்? என்று அந்தப் பயணி சிறிதுநேரம் சிந்தித்தார். என்ன ஆனாலும் சரி என்று, அந்த குழாயில், அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு அதை அடித்தார் அவர். முதல்முறை தண்ணீர் வரவில்லை. மூன்று, நான்கு முறை அடித்தார். ஐந்தாவது முறை அடித்தபோது தண்ணீர் பீறிட்டு வந்தது. ஆசை தீர, தாகம் தணியக் குடித்தார் அவர். தனது பெரிய குடுவையிலும் தண்ணீரை நிரப்பினார். பின்னர் அங்கிருந்து செல்வதற்குமுன், மறக்காமல் அந்த பாட்டிலில் தண்ணீரை நிரப்பி வைத்தார். அதோடு, அந்த குழாய்க்குக் கீழிருந்த அந்த குறிப்பிலும், “இது வேலை செய்கிறது” என்ற வரிகளையும், எழுதி வைத்துவிட்டு, மன நிம்மதியோடு பயணத்தைத் தொடர்ந்தார் அந்தப் பயணி. ஆம். நம் வாழ்வோடு இந்த உலகம் முடிவுறப்போவதில்லை. நமக்குப் பின்னும் மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நாம் உலகிலிருந்து விடைபெற்றுச்செல்லுகையில், நம் அன்புறவுகளுக்கு சொத்துக்களை விட்டுச்செல்வதை தவிர்த்து, மற்றவர்க்கென்று எதைவிட்டுச் செல்கிறோம்? நாம் உலகிற்கு வழங்கும் ஏதாவது ஒன்றால், யாரோ ஒருவர் பயனடைவார் என்ற நிம்மதி இருந்தால், வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், நாம் கோபுரமாக உயர்ந்து நிற்போம். எந்த ஒரு நன்மையும் நம்மோடு நின்றுவிடக் கூடாது. நாம் பெற்ற இன்பம், மற்றவரும் பெறுமாறு வாழ்ந்தால், இந்த உலகம் சொர்க்க பூமியாக விளங்கும்.

No comments:

Post a Comment