Monday, 27 July 2020

திருத்தந்தை: இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை

புலம்பெயர்ந்தோர் சந்திப்பு

மனித வாழ்வின் தெருமுனையில் இருப்பவர்கள், நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களும்தான். வயது முதிர்ந்தோரும், சிறாரும், நம் கடைக்கண் பார்வைக்காகவும், உதவும் கரத்திற்காகவும் காத்திருக்கின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை என்ற புரிதலில், தேவையில் இருப்போரைக் கருத்தில்கொண்டு அடுத்திருப்பவருக்கும் பணியாற்றுங்கள் என்று, அர்ஜென்டீனா நாட்டில் நடைபெறும் ஆன்மீக பயிற்சி ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனா நாட்டு Patagonia மாநிலத்திலுள்ள, Comodoro Rivadavia மறைமாவட்டம், நடத்திய நான்காவது மெய்நிகர் கருத்தரங்கிற்கு, ஜூலை 24, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இந்த காணொளிச் செய்தியை, அம்மறைமாவட்டம், தனது யூடியூப் ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆன்மீகப் பயிற்சி, “திருஅவையில் ஒன்றிப்பைப் புதுப்பித்தலுக்காக மனமாற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்றது என்பதை, தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வுலகில், பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும் உதவி தேவைப்படுகிறவர்கள் மீது அக்கறை காட்டவேண்டும் என்று, இந்த தலைப்பு வலியுறுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது தன்னலத்தின் காரணமாக, துன்புறுவோரை நோக்காமல் கடந்துசெல்ல பழகிக்கொண்டுள்ளோம், ஆயினும், நல்ல சமாரியர் போல நாம் பணியாற்றுமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, மனித வாழ்வின் தெருமுனையில் இருப்பவர்கள், நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களும்தான் என்றும், வயது முதிர்ந்தோரும், சிறாரும், நம் கடைக்கண் பார்வைக்காகவும், உதவும் கரத்திற்காகவும் காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். 
மற்றவருக்கு உதவிசெய்ய வேண்டும் என, தன் நாட்டு மக்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, "இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்.10:42) என்ற இயேசுவின் திருச்சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்.
துணிவோடிருந்து செயல்படுங்கள், மற்றவை அனைத்தும் உங்களை வந்தடையும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியாவிடம் அவர்களை அர்ப்பணித்துள்ளதோடு, தனக்காகச் செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மெய்நிகர் கருத்தரங்கில் அந்த மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 600 மேய்ப்புப்பணியாளர்கள் பங்குபெற்றனர். திருத்தந்தை தற்போது அனுப்பியுள்ள காணொளிச் செய்தி குறித்துப் பேசிய, அந்த மறைமாவட்ட ஆயர் Joaquin Gimeno Lahoz அவர்கள், திருத்தந்தை பெர்கோலியோ அவர்கள், புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், Patagonia மாநிலம் மீது எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...