புனித பெனடிக்ட், துறவு வாழ்வுக்கு எழுதிய விதிமுறைகள், புதிய துறவு சபைகளுக்கு ஒளிவிளக்காக அமைந்தன. இவர், அன்றாட வாழ்வின் ஆன்மீகத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகளை வழங்கியவர்.
மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி
மகிழ்வுநிறைந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கையிலிருந்து எவ்வாறு மலரும் என்பதை, புனித பெனடிக்ட், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
ஜூலை 11, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, புனித பெனடிக்ட் (புனித ஆசீர்வாதப்பர்) திருவிழாவை மையப்படுத்தி, #SaintBenedict என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஐரோப்பாவின் பாதுகாவலராகிய புனித பெனடிக்ட், மகிழ்வுநிறைந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கையிலிருந்து எவ்வாறு பிறக்கின்றது மற்றும், இது எவ்வாறு உலகை மாற்றுகிறது என்பதை, இன்றையக் கிறிஸ்தவர்களாகிய நமக்கு காட்டுவாராக” என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.
இத்தாலி நாட்டின் உம்ப்ரியா மாநிலத்தில், தற்போதைய நோர்சியா என்ற ஊரில் 5ம் நூற்றாண்டில் (கி.பி.480) உயர்குடும்பத்தில் பிறந்த, புனித பெனடிக்ட், மேற்கத்திய துறவு வாழ்வின் தந்தை என்றும், ஐரோப்பாவின் பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர், துறவு வாழ்வுக்கு எழுதிய விதிமுறைகள், அக்காலத்தில் உருவான புதிய துறவு சபைகளுக்கு ஒளிவிளக்காக அமைந்தன. இவர், இறைவேண்டலும், உழைப்பும், ஒன்றே என உறுதிசெய்தார். மொத்தத்தில் அன்றாட வாழ்வின் ஆன்மீகத்திற்குத் தேவையான அடிப்படை கூறுகளை வழங்கியவர், புனித பெனடிக்ட்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 10, இவ்வெள்ளியன்று, சிலே, இத்தாலி, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று வல்லுனர்களை, திருப்பீட சமுதாய அறிவியல் கழகத்தில், புதிய உறுப்பினர்களாக நியமித்தார்
தென் அமெரிக்க நாடான சிலேயிலிருந்து Pedro Morandé Court அவர்களையும், இத்தாலி நாட்டிலிருந்து Mario Draghi அவர்களையும், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலிருந்து Kokunre Adetokunbo Agbontaen Eghafona அவர்களையும் நியமித்துள்ளார், திருத்தந்தை.
சிலே நாட்டு பேராசிரியர் Pedro Morandé Court அவர்கள், கலாச்சார சமுதாயயியல், மதம் மற்றும், குடும்ப சமுதாயயியலில் வல்லுனர்.
பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இத்தாலி நாட்டின் Mario Draghi அவர்கள், உலக வங்கியின் இயக்குனராகவும், இத்தாலிய அரசின் சொத்து அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர்.
நைஜீரிய நாட்டின் Kokunre Eghafona அவர்கள், தொல்லியல் அறிவியலிலும், மானிடயியலிலும் பட்டங்களைப் பெற்றிருப்பவர்.
சமுதாய அறிவியல் சார்ந்த, குறிப்பாக, பொருளாதாரம், சமுதாயயியல், சட்டம், அரசியல், அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை ஊக்குவிக்கவும், அவற்றில் முன்னேற்றம் காணவுமென, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1994ம் ஆண்டு சனவரி முதல் தேதி, திருப்பீட சமுதாய அறிவியல் கழகத்தை உருவாக்கினார்.
No comments:
Post a Comment