Friday 17 July 2020

லூர்து அன்னை மரியாவின் திருத்தலம் - மெய்நிகர் திருப்பயணம்

லூர்து அன்னை மரியாவின் திருத்தலம் - மெய்நிகர் திருப்பயணம்

லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம், ஜூலை 16ம் தேதி, முதல் முறையாக, ஊடகங்கள் வழியே உலகெங்கிலும் உள்ள திருப்பயணிகளுக்கு, மெய்நிகர் திருப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம், ஜூலை 16, இவ்வியாழனன்று, முதல் முறையாக ஊடகங்கள் வழியே உலகெங்கிலும் உள்ள திருப்பயணிகளுக்கு, மெய்நிகர் திருப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
1858ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பெர்னதெத் சுபிரூ அவர்களுக்கு அன்னை மரியா காட்சிகள் வழங்கிய நிகழ்வுகளின் இறுதி சந்திப்பு, ஜூலை 16ம் தேதி நிகழ்ந்ததை நினைவுகூரும் வகையில், இவ்வியாழனன்று, இந்த மெய்நிகர் திருப்பயணம் நடத்தப்பட்டது.
கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், இத்திருத்தலம் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய நாளன்று உலகெங்கும் உள்ள திருப்பயணிகள், தொலைக்காட்சி, வானொலி, வலைத்தளம் மற்றும் ஏனைய சமுதாய ஊடகங்கள் வழியே, திருத்தலத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 16 இவ்வியாழன் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இத்திருத்தலத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. குறிப்பாக, மாலை 4மணி முதல் 6 மணி முடிய, அன்னை மரியா காட்சி தந்த கெபியை மையப்படுத்தி நிகழ்ந்த செபமாலை, ஊர்வலம், திருநற்கருணை ஆசீர் ஆகியவை ஒளிபரப்பானது.
ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்திற்கும் அதிகமான திருப்பயணிகளை வரவேற்கும் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், இவ்வாண்டு திருப்பயணிகளின் வருகை இன்றி, பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது என்று இத்திருத்தல அறிக்கையொன்று கூறுகிறது.
கடந்த 162 ஆண்டுகளாக பல கோடி மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் வழங்கிவரும் இத்திருத்தலம், இவ்வாண்டு, மெய்நிகர் திருப்பயணம் வழியே மக்களை சென்றடைவது முக்கியம் என்று இத்திருத்தல இணையத்தளம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...