Friday, 31 July 2020

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருது சேவை

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருதுமொழிச் சேவையை பேராயர் அர்ஷத்  துவக்கிவைக்கிறார்

கிறிஸ்தவ உலகின் செய்திகளை பாகிஸ்தான் மக்கள் அறிந்துகொள்ளவும், அமைதி, அன்பு ஆகிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் வானொலி - பேராயர் ஜோசப் அர்ஷத்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருதுமொழிச் சேவையை, பாகிஸ்தான் தலத்திருஅவை, ஜூலை 25, கடந்த சனிக்கிழமைத் துவங்கியது என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

பாகிஸ்தான் சமூகத்தொடர்பு பணிக்குழுவின் தலைவரும், இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி உயர் மறைமாவட்ட பேராயருமான ஜோசப் அர்ஷத் அவர்கள், இலாகூரில் அமைந்துள்ள தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சேவையை, ஆசீர்வதித்து, துவக்கிவைத்தார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும், வலைத்தளத்தின் வழியே ஒலிபரப்பாகும் 20 நிமிட செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ உலகின் செய்திகளை பாகிஸ்தான் மக்கள் அறிந்துகொள்ளவும், அமைதி, அன்பு ஆகிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று பேராயர் அர்ஷத் அவர்கள் கூறினார்.

இந்த 20 நிமிட ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், மனித உரிமைகள், அமைதி முயற்சிகள், கல்வி, பிறரன்புப் பணிகள், பல்சமய உரையாடல் ஆகிய பல பிரிவுகளில், உலகெங்கிலுமிருந்து செய்திகளைத் திரட்டி வழங்கும் என்று, தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு மையத்தின் இயக்குனர் அருள்பணி Qaiser Feroz அவர்கள் கூறினார்.

பாகிஸ்தானில் இயங்கிவந்த கிறிஸ்தவ ஊடக முயற்சிகள் அனைத்தையும், அந்நாட்டு அரசு, PEMRA என்ற சட்டத்தின் வழியே, 2016ம் ஆண்டு தடை செய்துள்ளதால், வலைத்தளம் வழியே தலத்திருஅவை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment