Wednesday 22 July 2020

கோவிட்-19: மனித வர்த்தகத்திற்கு எதிராக இந்திய அருள்சகோதரிகள்

மனித வர்த்தகத்திற்கு எதிராக உழைக்கும் அருள்சகோதரி ஜோதி பின்ட்டோ

இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள், மனித வர்த்தகத்திற்குப் பலியாகிவரும்வேளை, 2011 மற்றும், 2018ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 38,508 பேர் இதற்குப் பலியாகினர் என்று, அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்திய அருள்சகோதரிகள் குழு ஒன்று, கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், மனித வர்த்தகத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.
ஆசிய பெண் துறவிகள் கூட்டமைப்பு ஒன்று, 2009ம் ஆண்டில், "தலித்தா கும் இந்தியா" (AMRAT - Talitha Kum India) என்ற பெயரில், மனித வர்த்தகத்திற்கு எதிராக ஓர் இயக்கத்தை உருவாக்கி, இந்த வர்த்தகத்திற்குப் பலியாகும் பெண்களை மீட்டெடுத்து, அவர்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களை சமுதாயத்தில் மீண்டும் ஒன்றிணைத்து வருகிறது.
"தலித்தா கும் இந்தியா" இயக்கத்தை உருவாக்கிய, பெத்தனி சிறுமலர் துறவுசபையின் அருள்சகோதரி ஜோதி பின்ட்டோ அவர்கள், இந்தியாவில் கோவிட்-19 சூழலில், இந்த இயக்கத்தின் பணிகள் பற்றி பீதேஸ் செய்தியிடம் விளக்குகையில், வேலை இழப்பு, சொந்த கிராமங்களுக்குச் செல்வதில் சிரமம், மற்றும், கடுமையான ஏழ்மையால், பல ஏழை மக்கள் மனித வர்த்தகத்திற்குப் பலியாகின்றனர் என்று கூறினார். 
ஒரு மனிதர் பலமுறை விற்கப்படும் நிலையை எதிர்கொள்கிறார் என்றும், மனித வர்த்தகம் என்ற, மனவேதனையளிக்கும் புதியதொரு அடிமைமுறையை நாம் எதிர்கொள்கிறோம் என்றும் கூறினார், அருள்சகோதரி பின்ட்டோ.
இந்தியாவில், மனித வர்த்தகத்திலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பணியில், தன்னோடு சேர்ந்து, மற்ற பெண் துறவு சபைகளின் தன்னார்வலர் அருள்சகோதரிகளும் பணியாற்றுகின்றனர் என்றும், அருள்சகோதரி பின்ட்டோ அவர்கள் தெரிவித்தார்.
வடகிழக்கு இந்தியாவில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து கடைப்பிடிக்கப்படும் கோவிட்-19 விதிமுறைகளைப் பயன்படுத்தி, மனித வர்த்தகத்திற்குப் பலியாகவிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும், சிறாரை, தங்களது இயக்கம் காப்பாற்றியுள்ளது என்றும், அச்சகோதரி கூறினார்.
இந்தியாவில், ஏறத்தாழ ஒரு இலட்சம் அருள்சகோதரிகள், கிராமங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் தேயிலைத் தோட்டங்கள், சிறைகள், சேரிகள், சாலைகள் போன்ற இடங்களில், ஆரவாரமின்றி பணியாற்றி வருகின்றனர் மற்றும், மனிதவர்த்தகர்களிடம் சிக்கிக்கொள்ளாதபடி, ஏழைப் பெண்களைக் காப்பாற்றிவருகின்றனர் என்றும், அருள்சகோதரி பின்ட்டோ அவர்கள் கூறினார்.
இந்தியாவில், ஆயுதங்கள், மற்றும், போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அடுத்த நிலையில், மனித வர்த்தகம் சிறந்த யுக்திகளுடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, குற்றக்கும்பல்கள் இத்தொழிலை நடத்தி வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள், மனித வர்த்தகத்திற்குப் பலியாகிவரும்வேளை, 2011 மற்றும், 2018ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 38,508 பேர் இதற்குப் பலியாகினர் என்று, அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும், இந்தியாவில் சிறார், வளர்இளம் பருவத்தினர் உட்பட, 80 இலட்சம் பேர், நவீன அடிமைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று, உலக அடிமைமுறை குறியீடு கூறுகிறது.
உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பால் (UISG) நடத்தப்படும், தலித்தா கும் இயக்கம், இந்தியா உட்பட 92 நாடுகளில், 44 தேசிய அமைப்புகள் வழியாக செயல்பட்டு வருகிறது. (Fides)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...