Wednesday, 22 July 2020

கடவுள், பெற்றோர், மற்றும், குழந்தைகள் மீது காட்டப்படும் அன்பு

வத்திக்கான் கோடை முகாமில் சிறாருடன் திருத்தந்தை

திருத்தந்தை : சிறார்கள் அனைவரும் தங்களுக்கு மேலும் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும், ஏனெனில், தனியாக நின்று விளையாட விரும்புபவர்கள் சுயநலவாதிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கடவுள் மீதும், பெற்றோர்மீதும், குழந்தைகள் மீதும் காட்டப்படும் அன்பிற்கு இடையே இருக்கும் தொடர்பு, மற்றும், அது வழங்கும் கனிகள் குறித்து ஜூலை 21, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை  பிரான்சிஸ்.
'பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள அன்பு, இறைவன் மீது கொள்ளும் அன்பால் தூண்டப்பட்டு தூய்மையடையும்போது, அது முற்றிலும் கனி தருவதாக மாறி, குடும்பத்திற்குள்ளும், அதைத் தாண்டியும், நற்கனிகளைத் தருகிறது', என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
இதற்கிடையே, வத்திக்கானில் இம்மாதத்தில் இடம்பெற்றுவரும், கோடைகால சிறார் முகாமிற்கு, முன்னறிவிப்பின்றி சென்ற திருத்தந்தை, அங்கு பயிற்சி பெறும் சிறார்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இத்திங்கள் காலை, சிறார்கள் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தபோது, வத்திக்கான் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிற்குள் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சாப்பாட்டு மேசைக்கும் சென்று சிறார்களுடன் உரையாடியதுடன், அவர்களுக்கு ஒரு சிறு உரையும் நிகழ்த்தினார்.
சிறார்கள் அனைவரும் இம்முகாம் நேரத்தில், புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும், ஏனெனில், தனியாக விளையாட விரும்புபவர்கள், சுயநலவாதிகளாகவே இருக்கமுடியும் எனவும் சிறார்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறார்களைச் சந்தித்தபின், அவர்களுக்குப் பயிற்சி வழங்கும் தன்னார்வப் பணியாளர்களையும்  தனியாகச் சந்தித்து, தன் பாராட்டுக்களையும் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை.
திருத்தந்தை கேட்டுக்கொண்டதன்பேரில், வத்திக்கான் பணியாளர்களின் குழந்தைகளுக்காக இம்மாதத் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கோடை முகாமில், 5 வயதிற்கும் 14 வயதிற்கும் உட்பட்ட ஏறத்தாழ 100 சிறார்கள் கலந்துகொள்கின்றனர்.
இவர்கள், வத்திக்கான் தோட்டம், வத்திக்கான் ஹெலிகாப்டர் தளம் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம் ஆகியவற்றில், நீச்சல், டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள், கல்வி கற்றல், செபித்தல், போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கோடை விடுமுறையை செலவிட்டு வருகின்றனர்.
வத்திக்கான் காவல்துறையின் ஆன்மீக குருவாக இருக்கும் அருள்பணி Franco Fontana அவர்களின் கண்காணிப்பில், தொன்போஸ்கொவின் சலேசியத் துறவுசபையின் ஒத்துழைப்புடன், இந்த சிறார் கோடை முகாம், வத்திக்கானுக்குள் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...