ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
எகிப்து நாட்டில், "ஏழைகளின் மருத்துவர்" என்றழைக்கப்பட்ட மருத்துவர் Mohammed Mashaly அவர்கள், தன் 76வது வயதில் மரணமடைந்தார்.
"உடன்பிறந்த நிலை" என்ற இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டறிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட அல் அசார் தலைமை குருவான Ahmed Al-Tayyeb அவர்கள், மருத்துவர் Mashaly அவர்களின் மறைவுக்கு தன் இரங்கல் செய்தியை வழங்கிய வேளையில், Mashaly அவர்கள், தன் வாழ்வின் இறுதி நாள் வரை தேவையில் உள்ள நோயாளிகளுக்கு உதவினார் என்று கூறினார்.
1967ம் ஆண்டு மருத்துவப் படிப்பை நிறைவு செய்த Mashaly அவர்கள், எகிப்து நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் தன் பணிகளைத் துவக்கி, பின்னர் அந்நாட்டின் Tanta என்ற நகரில் மருத்துவமனையொன்றைத் துவங்கி நடத்திவந்தார்.
ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 15 மணி நேரங்கள் மக்களுக்காகப் பணியாற்றிய அவர், மக்களிடமிருந்து, குறிப்பாக, வறியோரிடமிருந்து எவ்வித கட்டணமும் வாங்காமல் பணியாற்றினார் என்று சொல்லப்படுகிறது.
கொள்ளைநோய் குறித்தும், குழந்தைகள் மருத்துவம் மற்றும் உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆகிய துறைகள் குறித்தும் சிறந்த அறிவு பெற்றிருந்த மருத்துவர் Mashaly அவர்கள், கடந்த ஓராண்டளவாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ஜூலை 28, இச்செவ்வாய் அதிகாலையில் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment